பக்கம்:முத்தமிழ் மதுரை.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

72

முத்தமிழ் மதுரை


நிலைத்துச் செங்கோலோச்சிய சிறப்பினதாகவும் மதுரை விளங்கிற்று.

விருந்தோம்பல்

இடைக்குல மகளான மாதரி, கோவலன் கண்ணகியரை, தான் முன்பே கண்டும் கேட்டும் அறியாத புதியவரை, விருந்தாகக் கொண்டு, சொந்த மகளையும் மருமகனையும் போலவே பேணிக்காத்த மனநெகிழ்வை மதுரையின் விருந்தோம்பற் பண்பிற்கே எடுத்துக் காட்டாகக் கூறலாம். பாற்பயன் கொண்டு வாழ்ந்த அந்த அம்மையின் செம்மையான பாசவுணர்வே, அக்காலத் தமிழ் மதுரையின் பொதுப்பண்பென்றும் போற்றலாம்.

பிரிவற்ற ஒருமை

சங்ககால மதுரைமக்கள் பல தொழில்கள் பேணி வந்தனர். பல குடியினராக வாழ்ந்தனர். பல கடவுட் கொள்கைகளைப் பேணினர். எனினும், அனைவரும் ஒருமை யுணர்வுடன் வாழ்ந்தனர். பேதம் பாராட்டவோ, உயர்வு தாழ்வு கற்பித்தலோ, மாறுபட்டுப் பகைத்தலோ நிலவவில்லை. இதனால், மனிதவுணர்வில் மேலோங்கிய உணர்வினராகவே அவர்கள் விளங்கினர். மதுரையின் மாண்புக்கு இந்த ஒருமையுணர்வும் தனிக் காரணமாகும்.

மக்கள் மனத்தில் அறம்

அரசன் செங்கோல் தவறிற்றென்று துடிதுடிக்கும் மதுரை மக்களைச் சிலம்பிற் காண்கிறோம். அரசனைப் போலவே மக்களும் செங்கோன்மையை மதித்துப் போற்றிய சிறப்பு இதனாற் காணப்பெறும்

வேற்று நாட்டார்

மேலை நாட்டாராகிய ரோமரும், கிரேக்கரும், மற்றும் பல நாட்டினரும் வாணிகம் பேணவும் கலாசாரம் பேணவும் ஆர்வத்தோடு உறவுகொண்ட சிறப்பும் பழந்தமிழ் மதுரைக்கு இருந்தது. மதுரையாட்சி உலகளாவிய புகழ் படைத்திருந்த நிலையே இதற்குக் காரணமாகும்.

ஆரிய நாட்டாரின் அரசியல் ஊடுருவல் பாண்டியர் படைமறவனான பழையன் மாறனால் முறியடிக்கப்பெற்றது. ஆனால், அவர்கள் விரும்பி வந்து தமிழ் உயர்வும் பண்பும் அறிவதையோ, தமிழ் கற்றுப் புலமை பெற்றுச் சிறப்படை