பக்கம்:முத்தமிழ் மதுரை.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலியூர்க் கேசிகன்

73


வதையோ எவரும் தடுக்கவில்லை. மாறாக, அவர்கட்கு வேண்டுவன செய்து உதவினர் என்றே காண்கின்றோம்.

வடபுலத்திலிருந்து வந்து, தமிழகத்துத் தமிழின் சிறப்புக்குப் பணியாற்றியவர்களுள் அகத்தியர், தொல்காப்பியர், வான்மீகியார், மார்க்கண்டேயர் போன்ற பலர், தமிழின் செவ்விக்கும் சிறப்புக்கும் தொண்டாற்றியமை போற்றற்கு உரியதாகும்.

ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவு உணர்த்தக் கபிலர் செய்த குறிஞ்சிப் பாட்டும், பிறவும் இந்தத் தமிழ் ஆர்வத்தையும், அக்காலத்தே தமிழுயர்வு உலகெலாம் மதிக்கப்பட்டுப் பலர் மதுரையை நாடித் தமிழ்கற்க வந்து கூடியதையும், மதுரை தமிழின் தலைமையிடமாகச் சிறப்புற்றிருந்தமையும் காட்டும்.

பரிபாடலுள், திருப்பரங்குன்றத்தே நிகழ்ந்ததாகக் கற்பித்துப் பாடியுள்ள வள்ளி தேவானையர் சண்டையும், ஆரியர்க்குத் தமிழுணர்வு ஊட்டுவதற்குப் பாடியதேயாகும்.

இதனால், அந்நாளிலும் வடபுலத்தார் ஊடுருவல் தமிழகத்தில் இருந்ததென்பதையும், அவர்களுள் சிலர் தமிழார்வத்தினராக இருந்தனர் என்பதையும், சிலர் தமிழறியாது தம்முயர்வு பாராட்டவே, தமிழறிந்தார் அவர்க்கும் தமிழுணர்வு ஊட்டித் திருத்தினர் என்பதையும் காணலாம்.

இதுபற்றியே, வடமொழியில் விளங்கும் பல தத்துவ விளக்க நூல்களைச் செய்தவர்கள், திராவிடப் பேரறிஞர்களே என்று சிலர் கூறுவர்.

இவ்வாறு, சங்ககால மதுரையானது, முத்தமிழின் கோநகராகவும் விளங்கிற்று எனலாம்.

மறமாண்பு

மறமாண்பில் பழந்தமிழ்ப் பாண்டியர்கள் ஈடும் இணையும் அற்றுச் சிறந்திருந்தனர். அவர்களுடைய போர் மறத்தைப் பற்றிப் புறநானூற்றுச் செய்யுட்களுள் பல புலவர்கள் பாடிப் போற்றியுள்ளனர்.

கோட்டைகள், அகழிகள், காவற்காடுகள், எந்திரப் பொறிகள், நால்வகைப் படையணிகள் என்றெல்லாம் காவல்துறை மிகவும் வலிமை பெற்றிருந்ததென்றும் நாம் காண்கின்றோம். மறமாண்பிற் சிறந்த பழந்தமிழ் மக்களுள் ‘மறவர்’ என்றொரு குடியினரே இருந்தனர் என்பது,