பக்கம்:முத்தமிழ் மதுரை.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

74

முத்தமிழ் மதுரை


மறமாண்பிலே மதுரை சிறந்திருந்த செவ்விக்கு மேலும் சான்று பகர்வதாகும்.

போரும், அதற்கென அமைந்த நெறிமுறைகளுடன் ஒழுங்குற நடந்ததையும், இந்நாட்போல ஆயுதமற்றோரையும், போர்க்களம் வராத மக்களையும் படைமறவர்கள் கொல்வதும் அழிப்பதும் இல்லை என்பதையும் காணலாம்.

தெய்வ நம்பிக்கை

மக்கள் தெய்வ வழிபாடுகளிலும் மனங்கலந்து ஈடுபட்டு வந்தனர். தம் குறைகளைச் சொல்லி அவற்றைப் போக்குமாறு பணிந்தனர். பூவும் பலிப்பொருள்களும் தந்து போற்றினர். இவ்வாறு அவர்கள் பரங்குன்றப் பெருமானையும், திருமாலையும், வையையும், கொற்றவையையும், மற்றும் பல தெய்வங்களையும் வழிபட்டு வந்த மரபினையும் நாம் காணுகின்றோம்.

சமுதாய உணர்வோடும் தமிழ் உணர்வோடும் பக்தி யுணர்வும் இணைந்துவிளங்கிய சீர்மையை மதுரை அந்நாளில் பெற்றிருந்தது. அந்த உணர்வு மக்களுக்கு மனவலுவையும், தெளிவையும், எல்லா உயிரையும் போற்றும் அருளுணர்வையும் தந்தது. பரிபாடல் இந்த வழிபாட்டு நெறிகளை விளக்கிக்கூறும் சிறந்த நூலாகும்.

பதிகம், சதகம்

பத்துப் பாடல்களுள் ஒரு கருத்தை வலியுறுத்தும் பதிக மரபும், நூறு பாடல்களுள் ஒரு பெருங்கருத்தை வலியுறுத்தும் சதக மரபும் அந்நாளிலேயே வழங்கிய இலக்கிய நன்மரபு ஆகும். இதனைப் பதிற்றுப்பத்தும், ஐங்குறுநூறும், பிறவும் காட்டும். இவ்வாறு புதிய இலக்கிய மரபுகளின் எழுச்சிக்கும் மதுரை வழிகாட்டி வந்தது.

பற்பல சமயங்களில் புலவர்கள் பாடிய செய்யுட்களைத் தொகுத்து வகைப்படுத்தி ஒழுங்கு செய்து பேணிய நூற்களுடன், திணை விளக்கங்களாகச் செம்மையுடன் செய்யப்பெற்ற தனித்தனி நூல்களும் அக்காலத்தே எழுந்துள்ளன. இவை கலித்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, நெடுநல்வாடை, மதுரைக்காஞ்சி போன்ற தனி நூல்களாகும்.

இன்ப வாழ்வு

மறமாண்பில் சிறந்திருந்த மதுரை மக்கள் இன்ப வாழ்வை