பக்கம்:முத்தமிழ் மதுரை.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலியூர்க் கேசிகன்

75


மறந்து புறக்கணித்தவரும் அல்லர். அதன் இனிய நயத்தை அறிந்தறிந்து துய்த்துக் களித்தவர்கள் அவர்கள்.

கவின் கலைகளின் ஏற்றமும், பூச்சுப் புனைவுகளின் செழுமையும் இந்த வாழ்வுக்கு மேலும் வளமையூட்டி வந்தன.

வையையிற் புதுநீர் வரவும், மதுரை மக்கள் நீராடிக் களித்த இன்பக் காட்சிகளைப் பரிபாடற் செய்யுட்கள் அழகாக ஓவியப்படுத்தி உரைக்கின்றன. அவற்றைக் கற்கும்போது, வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியையும் வீணாக்காது நுகர்ந்து களித்த பழந்தமிழ் மக்களின் வாழ்வியற் சிறப்பு விளங்கும்.

கற்பற மகளிர்

மகளிர் தம்மைப் பூசியும் புனைந்தும் களிப்பதிலும், சிறப்பாக இல்லறம் நடத்தி வாழ்வதிலும் சிறந்து விளங்கினர். காதல் வாழ்விலும் கற்பு வாழ்விலும் அவர்கள் பேணிய பெருமிதமும், திண்மையும் வியந்து போற்றற்குரிய மாண்பினவாகும்.

கணவன்மாரிடம் இவர்கள் கொண்டிருந்த பேரன்புக்கு எல்லையே கிடையாது. ‘கணவனை இழந்தோர்க்குக் காட்டுவது இல்’ என்று, அவன் உயிரிழந்ததும் தானும் உயிர்விட்ட பாண்டிமாதேவியும், கணவனுக்கு ஏற்பட்ட பழிதுடைக்க வழக்குரைத்து வென்ற கண்ணகியும், தன் கணவன் மாயத் தீப்பாய்ந்து உயிர்விட்ட பூதப் பாண்டியன் தேவியும், பெண்மையின் தெய்வீக வடிவங்கள் ஆவர்.

அறவோர் பலர்

அறநெறி காக்கும் அறவோர்களுக்கும் மதுரையிற் குறைவேயில்லை. இவர்கள் வந்து தங்குவதற்கென்றே ‘புறஞ்சேரி’ என்றொரு தனியிடமும், அதன்கண் பல வசதிகளும் விளங்கின. இவர்கள் மக்களால் மதிக்கப்பெற்று, மக்களுக்கு ஆன்ம உயர்வுக்கான பல நெறிகளையும் காட்டி வந்தனர்.

பாரதம்

வடமொழி இதிகாசங்களில் பாரதம் தமிழ் மக்களை மிகவும் கவர்ந்தது. இராமாயணம் இத்தகு கவர்ச்சி அடையவில்லை. சங்க காலத்திலேயே பெருந்தேவனார் பாரதத்தைத் தமிழாக்கிப் ‘பாரதம் பாடிய’ என்னும் அடைமொழியும் பெற்றார். சிலம்பின் ஆய்ச்சியர் குறவையும், மற்றும் பல முல்லைப்பாக்களும், பாரதக் கதை பற்றிய தமிழரின் ஈடுபாட்டை விளக்கும்.

வடபுலத்துக் கண்ணனின் மதுரைக்கும், தென்னவரின்