பக்கம்:முத்தமிழ் மதுரை.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலியூர்க் கேசிகன்

77


தனித்துறையாகப் பயிலப்பட்டும், பயிற்றப் பட்டும், பாராட்டி வளப்படுத்தப்பட்டும் வந்த சிறப்பும் பழ மதுரைக்கு இருந்தது. ‘மதுரைத் தமிழ்க் கூத்தனார்’ என்னும் பெயர், ‘தமிழ்க் கூத்து’ அன்று நிலவிய கூத்துக்களில் தனிவகை எனவும், இவ்வாறே பிறபுலக் கூத்துகளும் மதுரையில் நிலவின என்றும் காட்டுவதாகும்.

பொற்காலம்

ஆகவே, கடைச்சங்க காலத்து, மதுரைப் பேரூரைத் தமிழின், தமிழரின் பொற்காலத்தை நினைப்பிக்கும் பேரூர் என்றே போற்றலாம்; போற்றவும் வேண்டும்.

முடிவுரை

இவ்வாறு சங்ககால மதுரையானது எல்லாத் துறைகளிலும் ஏற்றம்பெற்று, தமிழின், தமிழரின் கோநகராக, கொடிமாடக் கூடலாக அந்நாளிலே விளங்கிற்று.

இதன் பின்னர் வந்த பிற்காலப் பாண்டியர்கள் காலத்திலும் மதுரையின் மாண்பு காப்பாற்றப் பட்டே வந்தது. எனினும், பிற்காலத்தே களப்பிரர், ஹொய்சாளர், நாயக்கர்கள், மகமதியர்கள் போன்ற பலரின் படையெடுப்புக்களால் இன்னலும் துயரமும் பெற்றுத் தன் சிறப்பில் குன்றிய தென்றாலும், மதுரை மீண்டும் மீண்டும் தன் உயர்வைப் பேணி எழுந்து புகழ்பெற்றும் வந்துள்ளது என்றும் காணலாம்.

* * *