பக்கம்:முத்தம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

15

தவிர வேறு என்ன எதிர்பார்க்க முடியும்!' என்று சமாதானப்படுத்தும்.

பத்மா வழக்கம்போல் தான் உண்டு, தன் கொள்கைகள் உண்டு என்ற தன்மையில் இயங்கிவந்தாள்.

'ஆமடி பத்மா, நீ சொல்றது சரி. ஆனால் எனக்கொரு சந்தேகம், வாழ்க்கை பூராவும் ஒரு பெண் இப்படியே இருந்து விட முடியுமோ? ஆண்களின் நிலைமையும் அப்படித்தானே கல்யாணமே செய்து கொள்ளாமல்......'

அவள் வாயைக் கிளறிவிட வேண்டுமென்று எவளாவது ஒருத்தி ஆரம்பிப்பாள். முதலில் பத்மா விரிவாக விளக்குவது உண்டு. அதில் அவளுக்கு மகிழ்வு. ஆனால், மற்றவர்கள் புரியாத காரணத்தால் சந்தேகத் தெளிவுக்காகக் கேட்கவில்லை வம்பளந்து ரகளை செய்யவே விசாரிக்கிறார்கள் என்று உணர்ந்து கொண்டாள். அதனால் யாராவது கேட்டால், 'உங்களுக்கெல்லாம் சொன்னால் புரியாது. இருக்க முடியுமா முடியாதா, அப்படி நான் வாழ்த்து காட்டுகிறேனா இல்லையா என்பதைக் கவனித்துக்கொண்டே வாருங்கள்' என்று சொல்லி பேச்சை ஒடுக்கி விடுவாள்.

அவளிடம் யாரும் கேட்கவில்லை ஒரு பெரிய சந்தேகத்தை. மாணவர்கள் தங்களுக்குள்ளாகவே பேசிச் சிரித்து அமர்க்களப் படுத்திக் கொள்வார்கள். 'ஒரு விஷயமல்லவா பிரதர்! பத்மா சொல்றது போல்......' என்று தொடங்குவார் ஒருவர்.

உடனே 'வெட்டு' வந்து விழும், 'பத்மா புதுசாக் கண்டுபிடித்து விட்டாளா என்ன! ஏக கிறிஸ்து காலத்துக்கு முன்னாலேயே, பிளாட்டோ எழுதி வைத்ததுதானே. அதை அனுஷ்டிக்கணும்னு எத்தனையோ பேரு சொன்னாங்க. இப்ப பத்மாவும் சொல்கிறா. இதிலே என்ன தப்பு?'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முத்தம்.pdf/17&oldid=1412423" இலிருந்து மீள்விக்கப்பட்டது