பக்கம்:முத்தம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

17

இருக்கிறா. அவளாவது தனியாகவாவது வாழ்க்கை பூராகவாவது வாழ்ந்து விடுகிறதாவது! அவள்தான் பிதற்றுகிறாள் என்றாலும் நமக்கெல்லாம் மூளை இல்லாமலா போச்சு! ஹஹஹஹ!’ என்று கனைத்தார் ஒருவர்.

4.

பத்மா கிழவி யல்ல. குலுங்கிக் குலுங்கிச் சிரிக்கும் குமரி தான். பல பள்ளி மாணவிகளைப்போல, கூனள் முதுகுடையவளு மல்ல. குனிந்து நிலம் நோக்கி நடக்கும் குட்டைப்பெண்ணுமல்ல. அருமை யான ஜாதிக் குதிரை மாதிரி காம்பீர்ய நடைநடந்து, கண்ணாடிவளைக் கலகலப்பையும் சலங்கைக் சிரிப்பையும் காற்றிலே புரளவிட்டு, ஒயிலாகத் திரியும் எழிலி அவள். அவளுக்கு வயது அதிகமாகி விடவில்லை. முல்லைப் பல்லின் முறுவல் அழகுச் சிறு குழி சித்திரிக்க அமைந்த பளபளப்பான கண்ணாடிக் கன்னமும், குறுகுறு விழிகள் சுழலும் இள முகமும் சொல்லும் அவள் வயதால், பண்பால், குணத்தால் முதிரா இளஞ்சிறுமி தான் என்று. 'பால் வடியும் வதனம்' என்பார்களே அத்தகைய முகத்தோற்றம், அந்த அழகி சொன்னாள் வாழ்க்கை முழுவதும் கன்னியாக வாழ்வேன்' என்று.

இன்றைய நாகரிகத்தின் கோளாறுகளிலே இதுவுமொன்று என்று 'அமுத்தல்' சிரிப்பு உதித்தார்கள் அனுபவஸ்தர்கள். வயது வந்த ஆண்களும் பெண்களும் கல்யாணமே செய்து கொள்ளப் போவதில்லை என ஜம்பமடித்துக்கொள்வதை பெருமை என்று கருதுகிறார்கள் போலும்! போகப் போக அவர்கள் வாழ்வு மலர்ச்சி எப்படியமையினும் ஆரம்பத்தில்மிகத் தீவிரமாகச் சொல்லி விடுகிறார்கள் என்று விளக்கம் கூறிக் கொள்வதும் உண்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முத்தம்.pdf/19&oldid=1496226" இலிருந்து மீள்விக்கப்பட்டது