பக்கம்:முத்தம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

உங்களிடம் அதிகம் பேசவேண்டும். அவசியம் வாருங்கள், வருவீர்களா? கட்டாயம் வரணும்? ஊங்?' அவள் நடப்பதும் நிற்பதும் பேசுவதும் எல்லாமே கலை, அவளே அற்புதக் கலை அவள் ஒயி லாக நின்று அழகாகத் தலையசைத்துக் குழைவாகப் பேசும்போது, சொல்லவா வேண்டும்!

ஆனால் அப்பாவி ரகுராமனுக்கு அவள் அழகை அள்ளிப் பருகத் தைரியம் கிடையாது. கார்மேகத் திரை விலக்கி முழுநிலா அவன்மீது பூரணமாகச் சிந்தத் தயாராகத் தவித்தும் கூட, அவன் இருள் மூலையில் ஒடுங்க முயல்வதுபோல் தான் நின்றான். அவளை ஒருகணம் பார்ப்பான். அந்த அழகு வெளிச்சத்தின்மீது தாவிய விட்டில் கண்களை இழுத்து தரையையோ, மாடிப் படியையோ, வேறு எங்காவது எதையாவது காணவோ ஏவுவான். அவளுக்கு பதில் சொல்லியாகவேண்டுமே! "உம். வாறேன்" என்று தலையசைத்தான். நகரத் தொடங்கினான். - "ஓ மறந்துவிட்டீர்களே, மிஸ்டர் ரகுராமன்! என் வீட்டு விலாசத்தை கேட்கவே யில்லையே. அப்புறம் எப்படி வருவீர்களாம்?’ என்று சிரித்தாள் அழகி. அவன் அசட்டுச் சிரிப்புடன் அவளைப் பார்த்தான். - பத்மா தன் கையிலிருந்த நோட்டு ஒன்றிலிருந்து தாளைக் கிழித்து அதில் தன் விலாசம் குறித்தாள். மெதுவாகப் படியிறங்கி வந்து அதை அவனிடம் கொடுத்தாள். கொடுக்கும்போதே 'நீங்க அவசியம் வரணும் இந்த ஞாயிற்றுக்கிழமை. ஊம்? சரியா?' என்று தலை அசைப்பு, கையசைவுகளோடு கேட்டுக் கொண்டாள்.

'கட்டாயம் வாறேன்' என்று கூறிவிட்டு வேகமாக நடந்தான் அவன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முத்தம்.pdf/24&oldid=1496510" இலிருந்து மீள்விக்கப்பட்டது