பக்கம்:முத்துப்பட்டன் கதை.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

5

அதைக் கேட்ட வாலப்பகடைக்கு முற்றிலும் ஐயம் நீங்கவில்லை. ஆகையால் அவன் ஒரு நிபந்தனை விதிக்கிறான். குடுமியையும், பூணுலையும் களைந்து விட்டு, நாற்பது நாட்கள் சக்கிலியத் தொழில் செய்து செருப்பு விற்று வந்தால் தனது மக்களை அவனுக்கு மணம் செய்து வைப்பதாகக் கூறுகிறான். பட்டன் சம்மதியாமல் ஓடிவிடுவான் என்பதை அவன் எண்ணம். ஆனால் பட்டன் சம்மதிக்கிறான். அண்ணன்மாரிடம் சொல்லிவிட்டு அன்றே திரும்புவதாகக் கூறிச் செல்லுகிறான்.

பட்டன் தனது சகோதரர்களிடம் உண்மையைச் சொல்லுகிறான். அவர்கள் அவனுக்குப் புத்தி சொல்லுகிறார்கள். செத்த மாட்டைத் தின்னும் “புலையன் வீட்டுப் பெண்ணை பிராம்மணன் மணம் செய்து கொள்ளலாமா?” என்று கேட்கிறார்கள். “மேல். சாதிக்காரர், பசு உயிரோடிருக்கும் வரை பாலை உறிஞ்சிவிட்டு செத்தமாட்டைத்தான் புலையருக்கு மிஞ்ச விடுகிறார்கள்” என்று எதிர்த்துத் தாக்குகிறான் பட்டன். “புழு பூச்சிகளையும், நண்டையும் தின்னும் சக்கிலியன் வீட்டுப் பெண்ணைப் பார்ப்பான் மணக்கலாமா?” என்று அவர்கள் கேட்கிறார்கள். வயலில் விளையும் பயிரின் பயனை யெல்லாம் மேல் சாதிக்காரர்கள் அள்ளிச் சென்று விடுவதால் வயலில் மிஞ்சும், புழு பூச்சியும், நண்டும்தான் புலையருக்கு மிஞ்சுகின்றன,” என்று பட்டன் குத்திக் காட்டுகிறான். விவாதிப்பதில் பயனில்லை யென்று கண்ட சகோதரர்கள் அவனை ஒரு கல்லறைக்குள் தள்ளி அடைத்து விடுகிறார்கள்.

அவர்கள் போன பின்பு, முத்துப்பட்டன் தந்திரமாகக் கல்லறையிலிருந்து தப்பி வந்தான். வரும் வழியில் குடுமியை அறுத்தெறிந்தான். பூணூலைக் களைந்தான். தோல் வாங்கிச் செருப்புத் தைத்துத் தோளில் மாட்டிக்கொண்டு சேரிக்கு வந்து சேர்ந்தான். மாட்டுக்கிடையை விட்டு ஊர் திரும்பிய வாலப்பகடை குடிசை வாசலில் இருந்த செருப்பைக் கண்டு திகைத்தான். பட்டனைக்கண்டதும் திகைப்பு மகிழ்ச்சியாக மாறிற்று. உடனே திருமணம் நிச்சயித்தான். உறவு முறையாரை அழைத்தான். இந்த அதிசயமான திருமண வைபவத்தைப் பாடகன் வாய் மொழியாகவே கேட்போம்.