பக்கம்:முத்துப்பாடல்கள்.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



பதிப்புரை

பேராசிரியர் மயிலை சிவமுத்து அவர்கள் நாடறிந்த ஓர் இலக்கியப் பூஞ்சோலை. சென்னை மாணவர் மன்றத்தின் வாயிலாகத் தம் வாழ்நாளெல்லாம் மாணவ மணிகளின் மொழி வளமும் கலை நலமும் கருதி அரும்பெரும் தொண்டுகள் ஆற்றி வருபவர். சிறப்பாகப் பிற்காலப் பெரியோர்களாகிய தற்காலக் குழந்தைகளின் நல்வாழ்வை எண்ணி எண்ணிப் புதுப் புதுத் துறைகளில் அவர்கள் புரிந்து வரும் பணிகள் அளவில்லாதவை.

குழந்தைகளுக்குத் தகுதியான நல்ல புத்தகங்கள் வெளியிட வேண்டும் என்னும் ஆர்வம் மிக்கது இக்காலம். குழந்தை இலக்கியப் பசி எங்கும் பெருகி இருக்கும் இந்நாளில் பேராசிரியர் அவர்களின் அரிய இனிய பாடல்களின் தொகுப்பாகிய இப்புத்தகத்தை வெளியிடுவதில் நாங்கள் பெருமிதம் அடைகின்றோம்; பேரின்பம் பெறுகின்றோம். எங்கள் முயற்சியினைப் பாராட்டி வாழ்த்தியருளிய ஆசிரியருக்கு என்றும் நன்றி பாராட்டுகின்றோம்.

பேராசிரியர் அவர்கள் குழந்தைகளுக்காக அவ்வப்போது பாடிய பாடல்களைத் திரட்டி வரிசைப்படுத்தி இதோ, ‘முத்துப்பாடல்கள்’ என்று எங்களிடம் அளித்து இதனை அச்சிடும் போது உடனிருந்து உதவி புரிந்த புலவர் தணிகை உலகநாதன் அவர்கட்கும், குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா அவர்கட்கும் எங்கள் உளமார்ந்த நன்றி.


சென்னை
9 - 1959

சித. இராமநாதன்