பக்கம்:முந்நீர் விழா.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நெட்டிமாலைப் புலவர்

97

 "அவை நாவுக்கு இனியன; உடம்புக்கு மணம் தரும் சவ்வாது கூட இருக்கிறதே!”

சர்க்கரைப் புலவர், அமுத கவிராயர், சவ்வாதுப் புலவர் என்ற தமிழ்ப் புலவர்கள் மூவரும் இரகுநாத சேதுபதியின் அவைக்களப் புலவர்களாக இருந்தனர். சர்க்கரைப் புலவர் நாள்தோறும் கம்பராமாயணத்தை அரசருடைய முன்னிலையில் விரித்து விளக்கம் கூறி வந்தார். அதனைக் கேட்கப் பலர் கூடினர்.

கிடாரம் என்ற ஊரில் வாழ்ந்த சாந்தப் பிள்ளை என்பவருடைய குமாரர் சர்க்கரைப் புலவர். அவர் தமிழ் நூல்களை நன்கு கற்றுக் கவி பாடும் ஆற்றலும் பெற்றார், திருவாவடுதுறை யாதீனத்தில் சின்னப் பட்டத்தில் சிவக்கொழுந்து தேசிகர் என்பவர் தமிழ் இலக்கண இலக்கியத்தில் மிக்க தேர்ச்சி பெற்றவராக விளங்கினார். சர்க்கரைப் புலவர் அவரிடம் பல காலம் தமிழ் பயின்று புலமையில் நிறைந்தார்.

கம்பராமாயணத்தில் அவருக்கு மிகுதியான ஆர்வமும் பயிற்சியும் இருந்தன. அதனைப் பிரசங்கம் செய்யத் தொடங்கினார். அவருடைய நூற் புலமை கவி பாடும் ஆற்றல் ஆகியவற்றை விடச் சிறப்பாக விளங்கியது, அவர் ஆற்றி வந்த கம்பராமாயண விரிவுரை. அவரை யாவரும் கம்பராமாயணப் பிரசங்கி சர்க்கரைப் புலவர்' என்று வழங்கலாஞர்கள்.

அவருடைய தமிழ்ப் புலமையையும், கம்பராமாயணப் பிரசங்க ஆற்றலையும் கேள்வியுற்ற சேதுபதி மன்னர் அவரைத் தம் அவைக்களத்துக்கு வருவித்தார். கி. பி. 1645-முதல் 1670-வரையில் அரசாட்சி செய்திருந்த இரகுநாத சேதுபதி மன்னரே அவ்வாறு வருவித்தவர். அம் மன்னரைத் திருமலைச் சேதுபதி என்றும் கூறுவது வழக்கம்.

முந்-7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முந்நீர்_விழா.pdf/106&oldid=1214827" இலிருந்து மீள்விக்கப்பட்டது