பக்கம்:முந்நீர் விழா.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

98

முந்நீர் விழா


சர்க்கரைப் புலவருடைய தமிழாற்றலை அறிந்த மன்னர் அவரைத் தம் அவைக்களப் புலவர்களில் ஒருவராகச் செய்தார். அதனால் புலவருக்குப் பின்னும் ஊக்கம் மிகுதியாயிற்று. அவருடைய விரிவுரைகளில் உரமும் நயமும் அதிகமாயின.

சேதுபதி மன்னர் புலவரிடமிருந்து ஒரு முறை இராமாயணம் முழுவதும் கேட்டுவிட வேண்டுமென்று விரும்பினார். அவர் விருப்பப்படியே கம்பராமாயண விரிவுரை தொடங்கியது. கம்பருடைய கவி நயத்தையும் நுட்பங்களையும் புலவர் எடுத்துச் சொல்லச் சொல்லத் தேனில் விழுந்த வண்டெனவே யாவரும் மயங்கிக் கேட்டு இன்புற்றனர். சேதுபதி மன்னருக்குப் புலவரிடம் அன்பு வர வர மிகுதியாயிற்று.

சர்க்கரைப் புலவர் அவ்வப்போது சேதுபதியைப் பாராட்டிப் பாடுவதுண்டு. அந்தப் பாடல்களை மன்னர் சுவைத்து மகிழ்ந்து பாராட்டுவார். "கம்பன் கவிக் கடலில் நீந்தும் உங்கள் வாக்கின் இனிமைக்கு அளவு ஏது?" என்று புகழ்வார்.

சேதுபதியின் அவைக்களப் புலவரில் மற்ருெருவராகிய சவ்வாதுப் புலவர் இஸ்லாமியர். அவரும் நல்ல கவி பாடும் திறமை பெற்றவர். அடிக்கடி சேதுபதி மன்னர் சர்க்கரைப் புலவரைப் பாராட்டுவதைக் கேட்ட அவருக்குச் சற்றே பொறாமை உண்டாயிற்று. “சர்க்கரை போல இந்தக் கவி இனிக்கிறது" என்று சேதுபதி மன்னர் ஒருமுறை சொன்னபோது சவ்வாதுப் புலவர், "சர்க்கரை தொண்டை மட்டும்" என்று. சொன்னார். அந்தக் கவி நெடுநாள் இனிக்காது என்ற கருத்தை வைத்தே பேசினார்.

சவ்வாதுப் புலவர் மனத்தில் சிறிது மாசு படர்வதை அறிந்த சர்க்கரைப் புலவர் உடனே, "சவ்வா தோ?" என்று கேட்டார். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முந்நீர்_விழா.pdf/107&oldid=1214823" இலிருந்து மீள்விக்கப்பட்டது