பக்கம்:முந்நீர் விழா.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நெட்டிமாலப் புலவர்

101

சிந்தைமிக வேசற்றும் மலையாது
சபையிலே செய்யும்ப்ர சங்கநிபுணன்
சேதுபதி சித்தமகிழ் சர்க்கரைக்
கவிராச சிங்கம்யாம் எழுதும் நிருபம்

என்பது அந்தப் பகுதி.

3

ரகுநாத சேதுபதி சர்க்கரைப் புலவருக்கு அவ்வப் போது அளித்த பரிசில்களும் வழங்கிய மானியங்களும் பல. நிலவளம் மிக்க சிறுகம்பையூர் என்ற கிராமத்தில் வளப்பமான சில நிலங்களை அவருக்கு மானியமாக வழங்கினார். சர்க்கரைப் புலவர் அவ்வூர் தாம் வாழ்வதற்கு ஏற்றதாக இருப்பதை அறிந்து, அங்கேயே குடியேறினார். அடிக்கடி சேதுபதி மன்னரை வந்து கண்டு, தம் தமிழ்க் கவிகளாலும் பழந்தமிழ் நூற் கவிகளாலும் அவருக்கு மகிழ்ச்சியை அளித்து வந்தார்.

புலவருக்கு மன்னர் வழங்கிய நிலப்பகுதிக்குக் கோணச்செய் என்று பெயர். அது மிகவும். நன்றாக விளையும் நிலம். அந்த நிலத்தின் விளைவைக் கண்டு மக்கள் வியந்தனர். "புலவருடைய வாக்கில் கவி விளைவதைப் போல அல்லவா இந்தச் செய் விளைகிறது?" என்று பாராட்டினார்கள்.

ஒரு முறை நாலு பேர் கூடிப் பேசிக் கொண்டிருந்த போது புலவருடைய நிலத்தின் வளத்தைப்பற்றியும் பேசினார்கள். அப்போது அப்பக்கமாக வந்த சர்க்கரைப் புலவர் காதில் அவர்கள். பேச்சு விழவே, "ஆமாம் ஆமாம், கரும்பாலை ஆடுவதேன்? கம்பையூர்க் கோணச் செய் விளைவதேன்? சர்க்கரைக்கு, சர்க்கரைக்கு" என்று. இரு சொல் அலங்காரமாகப் பேசினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முந்நீர்_விழா.pdf/110&oldid=1214817" இலிருந்து மீள்விக்கப்பட்டது