பக்கம்:முந்நீர் விழா.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பாம்புக் குட்டி

சிவகங்கையை ஆண்டு வந்த மருதபாண்டியரைப் பற்றிப் பல அருமையான வரலாறுகள் தமிழ்நாட்டில் வழங்குகின்றன. 18-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்த அவர் பெருவீரர்; நல்ல கலைத்திறம் தேரும் இயல்பினர்; பெருவள்ளல். அவரைப் புலவர்கள் பாடிய பாடல்கள் அங்கங்கே வழங்குகின்றன.

அக் காலத்தில் இராமேசுவரம் செல்லும் யாத்திரிகர்கள் பெரும்பாலும் நடந்தே செல்வார்கள். அப்படிச் செல்பவர்கள் தங்கி இளேப்பாறவும், உணவு கொள் ளவும் அங்கங்கே அரசர்களும் அறச்செல்வர்களும் பல சத்திரங்களைக் கட்டிவைத்தனர்; சாலைகளில் மரங்களை நட்டு நிழல் செய்தனர். இடையிடையே தண்ணீர்ப் பந்தலை அமைத்தனர். மருதபாண்டியரும் இப்படிச் சில சத்திரங்களைக் கட்டிவைத்தார். தாம் நிறுவிய அறங்கள் செவ்வனே நடைபெறுகின்றனவா என்று அவ்வப்போது சென்று பார்த்து வருவது அவர் வழக்கம்

இராமேசுவரத்துக்குச் செல்லும் வழியில் கலிய நகரி என்ற ஊர் இருக்கிறது. அங்கே ஒரு சத்திரம் கட்டினால் வழிப் போவோருக்கு நலமாக இருக்கும் என்று சிலர் கூறினார்கள். மருதபாண்டியர் அந்த ஊர் சென்று பார்த்து வந்தார். அங்கே சத்திரம் கட்டுவதனால் பலர் பயன் பெறுவார்கள் என்பதை அவர் உணர்ந்தார். அப்படியே கட்டும்படி கட்டளை பிறப்பித்து விட்டார். கட்டிட வேலை நடந்து கொண்டிருந்தபோது அடிக்கடி சென்று பார்த்து வந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முந்நீர்_விழா.pdf/113&oldid=1214812" இலிருந்து மீள்விக்கப்பட்டது