பக்கம்:முந்நீர் விழா.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விச்சுளிப் பாய்ச்சல்

43


அவள் கண்ணிலே பட்டான். அவள் பார்வையைத் திருப்புவதற்கும் அவன் மோதிரத்தை வீசுவதற்கும் சரியாக இருந்தது. அவளுக்கு என்ன தோன்றியதோ! 'வீல்' என்று கத்திக்கொண்டு பாண்டியன் தோளின்மேல் சாய்ந்துவிட்டாள். அவளுடைய இந்தச் செயலால் பாண்டியன் கவனம் திடீரென்று அவள்பால் திரும்பியது. "என்ன!" என்று கேட்டபடியே அரசியைப் பற்றிக் கொண்டான். அதே சமயத்தில், அங்கே விச்சுளிப் பாய்ச்சல் நடந்துவிட்டது. வெண்ணெய் திரளும்போது பானை உடைந்த கதை ஆகிவிட்டது பாண்டியனுக்கு.

அவனுக்கு ஒரு பக்கம் கோபம்; ஒருபுறம் ஏமாற்றம்; ஒருபுறம் கவலை. இந்தச் சமயத்தில் அரசி சாய்ந்ததனால் கோபம்; விச்சுளிப் பாய்ச்சலைப் பார்க்க முடியாமற் போனதனால் ஏமாற்றம்; அரசியின் உடல் நிலையைப் பற்றிக் கவலை. உடனே தோழிமார்களைக் கூவி அரசியை அந்தப்புரத்திற்கு மெல்ல அழைத்துச் செல்லும்படி ஏவினான். பாதி மயக்க நிலையில் இருந்த அவளை அவர்கள் மெத்தென எடுத்துச் சென்றார்கள். கூட்டம் சற்றே கலகலத்தது.

பாண்டியன் நிதானம் தவறவில்லை. விச்சுளிப் பாய்ச்சலைத் தான் பார்க்க முடியவில்லையே என்ற ஏமாற்றமே பெரிதாக இருந்தது. கம்பத்திலிருந்து கீழே இறங்கி வந்த பெண் மோதிரத்தைக் கொண்டு வந்து அரசன் முன்னிலையில் வைத்துக் கும்பிட்டாள்.

அரசன் அவளைப் பார்த்தான். "இந்த மோதிரம் உனக்கே உரியது. அதுமட்டும் அன்று. மற்றொரு மோதிரமும் உனக்குத் தரவேண்டுமென்று விரும்புகிறேன்" என்றான்.

கழைக்கூத்தி திடுக்கிட்டாள். "மற்றெரு மோதிரமா! எதற்கு?" என்று கேட்டாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முந்நீர்_விழா.pdf/52&oldid=1207490" இலிருந்து மீள்விக்கப்பட்டது