பக்கம்:முந்நீர் விழா.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50

முந்நீர் விழா

 சடையனாருக்கு வியப்புக்கு மேல் வியப்பு உண்டாயிற்று. அந்தப் பெண்ணையே பார்த்து, "எங்கே, நீ பாடிய கவிகள் சிலவற்றைச் சொல்; பார்க்கலாம்” என்று கேட்டார்.

அவள் சில கவிகளைச் சொன்னாள். அது மட்டுமா? அயன்றைச் சடையனாரைப் பற்றியே ஒரு கவியை அப் பொழுது சொல்லிவிட்டாள்.

சடையனாருக்கு அவளிடத்தில் இப்போது மதிப்பு உண்டாயிற்று. அவர்களைச் சில நாள் அந்த ஊரிலே தங்கியிருக்கச் செய்தார். அவள் கழைக்கூத்தைப் பார்ப்பதைவிட அவளோடு பேசுவதிலும், அவள் கூறும் கவியைக் கேட்பதிலும் அவர் மிக்க மகிழ்ச்சியை அடைந்தார். அவளுக்குப் பின்னும் பரிசுகளை அளித்து விடை கொடுத்தனுப்பினார். 'அடிக்கடி இங்கே வந்து கொண்டிருங்கள்' என்று சொல்லி அனுப்பினார்.

அது முதல் அயன்றைச் சடையனாருடைய ஆதரவு அந்தப் பெண்ணுக்கு உண்டாயிற்று. ஒரு விதமான பாசம் அவள் பால் அமைந்ததென்றே சொல்லலாம். ஊர் ஊராகச் சுற்றி, நாடு நாடாக அலைந்தாலும் மூன்று மாதத்துக்கு ஒருமுறை மகளும் தந்தையும் அயனம்பாக்கம் போகாமல் இருக்க மாட்டார்கள்.

இந்த அன்பினால்தான் அந்தப் பெண், தான் இறக்கும்படி ஆகிவிட்டால் சடையனார் வருந்துவாரே என்று எண்ணினாள். அவள் துயர உணர்ச்சி கவியாக வெடித்தது.

மாகுன் றனையபொற் ருேளான்
வாழுதிமன் வான்கரும்பின்
பாகென்ற சொல்லியைப் பார்த்தென்னைப்
பார்த்திலன்; பையப்பையப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முந்நீர்_விழா.pdf/59&oldid=1207538" இலிருந்து மீள்விக்கப்பட்டது