பக்கம்:முந்நீர் விழா.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
iv

அவ்வப்போது பல வரலாறுகளை எழுதினேன். அவை புத்தக உருவிலும் வெளியாகியிருக்கின்றன. புதுமெருகு, எல்லாம் தமிழ், தமிழின் வெற்றி என்ற புத்தகங்கள் இத்தகைய நிகழ்ச்சி ஓவியங்கள் அடங்கியவையே.

அந்த முறையிலே எழுதிய வரலாறுகளின் கோவையே இந்த நூலும் ஆகும். இதில் உள்ள வரலாறுகளில் 'முந்நீர் விழா’ என்பது சுதேசமித்திரன் தீபாவளி மலரிலும், 'ஒத்த மரபு’ என்பது புதுமையிலும் வெளி வந்தவை. ஏனையவை தினமணி-கதிரில் வந்தவை. இவற்றை வெளியிட்டு உதவிய அப்பத்திரிகைகளின் ஆசிரியர்களுக்கு என் நன்றி உரியதாகும்.

*

முந்நீர் விழா என்பது தொல்காப்பியச் சிறப்புப் பாயிரம், பத்துப்பாட்டு என்பவற்றில் வரும் செய்திகளை வித்தாகக்கொண்டது. புறநானூற்றுப் பாடல் ஒன்றே பசிப்பிணி மருத்துவனை எழுதக் காரணமாயிற்று. கடலும் கிணறும் என்பது ஒரு தனிப் பாடலுக்கு நிகழ்ச்சி உருவில் கற்பனை செய்து அமைத்த விளக்கம். கூவம் தியாக சமுத்திரம், விச்சுளிப் பாய்ச்சல், அற்புதக் கொடை என்பன தொண்டைமண்டல சதகத்தை ஆதாரமாகக் கொண்டவை. கவிஞனும் செழியனும், ஒத்த மரபு. முத்திருளப்பர், நெட்டிமாலைப் புலவர், குட்டிப் பாம்பு என்பவை தனிப் பாடல்களிலிருந்தும் பிரபந்தங்களிலிருந்தும் தெரிந்துகொண்ட வரலாறுகள். திண்ணையில் கெண்டை, சோழமண்டல சதகத்திலிருந்து எடுத்த வரலாறு.

நிகழ்ச்சிகளை நிலைக்களமாகக் கொண்டமையால் இடையே வரும் பாடல்கள் எளிதில் மனத்தில் பதியும் தன்மை உடையவை. அவற்றின் பொருளையும் அங்கங்கே தெரிவித்திருக்கிறேன்.

உரையாடலும், வருணனையும், நிகழ்ச்சியைச் சொல்லும் போக்கும் சேர்ந்து ஒவ்வொரு வரலாற்றையும் சலிப்பின்றி ஊக்கத்துடன் படிக்க உதவும் என்ற எண்ணத்தால் அவற்றை விரவ வைத்திருக்கிறேன்.

தமிழ்நாட்டின் வரலாறு பெரிய கடல், அதில் இத்தகைய முத்துக்கள் பலவற்றை எடுக்கலாம். உண்மைக் கதைகளாகிய இவை மனிதப் பண்பின் பல பகுதிகளைப் புலப்படுத்தும் ஓவியங்களாக இருப்பதை இவற்றைப் படிப்பவர்கள் உணர்வார்கள் என்று நம்புகிறேன்.


"காந்தமலை"           

கி. வா. ஜகந்நாதன்
16-7-58

கல்யாண நகர்,
சென்னை-28
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முந்நீர்_விழா.pdf/6&oldid=1251600" இலிருந்து மீள்விக்கப்பட்டது