பக்கம்:முந்நீர் விழா.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

72

முந்நீர் விழா

"அதற்கு நேரம் இல்லை. நீங்கள் எச்சமயத்தில் எது இருந்தாலும் கேட்பவர்களுக்குக் கொடுத்து விடுவீர்கள் என்று கேள்வியுற்றேன். அது உண்மையானால் என் காரியம் இப்போதே நிறைவேற வசதி இருக்கிறது."

"நீங்கள் இன்ன கருத்துடன் பேசுகிறீர்கள் என்பது எனக்கு விளங்கவில்லை. என்னிடம் இருப்பதைக் கொடுக்க இப்போதும் ஆயத்தமாக இருக்கிறேன். இந்தாருங்கள். இந்தக்குடையை எடுத்துக் கொள்ளுங்கள்” என்று அதை நீட்டினார் வல்லாளர். புலவர் அதை வாங்கிக்கொண்டார். "இந்தப் பாத ரட்சையைக்கூட நீங்கள் உபயோகப்படுத்திக்கொள்ளலாம்" என்று, செல்வர் அதைக் கழற்றினார். புலவர் அதையும் பெற்றுக் கொண்டார்.

"மறந்து விட்டேனே! இந்தக் கடுக்கன்களையும் பெற்றுக்கொள்ளுங்கள்" என்று அந்த வள்ளல் அவற்றையும் கழற்றிக் கொடுத்தார்; “போதுமா?" என்றார்.

"வெறும் அணிகள் போதுமா? ஆடை வேண்டாமா?" என்றார் புலவர்.

வள்ளல் சிறிதே யோசித்தார். ஏதோ தீர்மானத்துக்கு வந்தவர் போல மேலே அணிந்திருந்த ஆடையையும் எடுத்துப் புலவர் கையில் கொடுத்தார். "இவரை அனுப்பிவிட்டு, நாம் நம் வீடு சென்று மறுபடியும் ஆடையணி புனைந்து காஞ்சீபுரம் போகலாம்" என்று அவர் நினைத்துக்கொண்டார். அதனல், தம் இடையில் இருந்த ஆடை ஒன்றைத் தவிர மற்ற எல்லாவற்றையும் புலவருக்கு வழங்கி விட்டார். "போதும் அல்லவா?" என்று அவர் கேட்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முந்நீர்_விழா.pdf/81&oldid=1207603" இலிருந்து மீள்விக்கப்பட்டது