பக்கம்:முந்நீர் விழா.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அற்புதக் கொடை

75



அறியாமை யானாலும், தங்கள் இணையற்ற வள்ளன்மையை உலகத்துக்கு வெளிப்படுத்த அந்த அறியாமை உதவியது. தாங்கள் வழங்கியவற்றை இதோ அப்படியே கொண்டு வந்திருக்கிறேன். ஏற்றுக் கொண்டு என் பிழையைப் பொறுத்தருள வேண்டும்' என்றுகூறி அழுதார் புலவர். .

‘புலவரே, நீங்கள் ஏன் இப்படி வருத்தப்பட வேண்டும்? உங்கள் முகமாக இறைவன் இந்தச் சோதனையைச் செய்தான். அவனே எனக்குத் துணை நின்று என் கொள்கையை நிலை நிறுத்தினான். ஒரு முறை அளித்ததை மீண்டும் பெறுவது தவறு. அப்போது என்னிடம் உள்ளவற்றையே நீங்கள் கேட்டு எனக்குப் பெருமை அளித்தது பற்றி உங்களிடம் நான் நன்றி பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறேன்.

புலவரும் வள்ளலும் ஒருவரை ஒருவர் பாராட்டி அளவளாவினர். புலவர் வள்ளலுடைய உபசாரத்தைப் பெற்றுச் சில காலம் தங்கி அவருடைய புகழைத் தமிழால் அளந்தார். வேறு பரிசில்களும் பெற்று விடை கொண்டு சென்றார்.

வல்லாளருடைய அற்புதக் கொடையைத் தமிழுலகம் முழுவதும் அறிந்து பாராட்டியது. தொண்டை மண்டல சதகம் இந்த நிகழ்ச்சியைப் பின் வரும் செய்யுளில் புலப்படுத்துகிறது.

உளத்துத் தயை அற்ற ஒர்புல
வோனுக்கு உடைஉதவிக்
குளத்துப் புனலை உடுத்துநின்
றேபின்பு கூவி அவைக்
களத்துப் புகுதக் கலைஉடுத்
தேகரை ஏறிவந்த
வளத்துப் புகழ்பெற்ற வல்லாள
னும்தொண்டை மண்டலமே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முந்நீர்_விழா.pdf/84&oldid=1214792" இலிருந்து மீள்விக்கப்பட்டது