பக்கம்:முந்நீர் விழா.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
திண்ணையில் கெண்டை



1

சோழ நாட்டில் புங்கனூர் என்னும் ஊரில் ஒரு வேளாண் செல்வர் இருந்தார். அவர் நல்ல வள்ளன்மை உடையவர். சுற்றத்தாரைப் பாதுகாக்கும் பெருந்தன்மை படைத்தவர். அவரிடம் மக்கள் யாவரும் பெருமதிப்பு வைத்திருந்தார்கள். அவருடைய இயற்கையான பெயரை யாரும் வெளிப்படையாகச் சொல்வ தில்லை. புங்கனூர் கிழார் என்று சொல்லுவார்கள். புங்கனூர் வள்ளல் என்றும் கூறுவர். அவரை ஊரினால் சுட்டுவதையன்றிப் பேரினால் சுட்டுவதை மதிப்புக்குறைவாகக் கருதினார்கள், அக்காலத்து மக்கள். பெரியவர்களின் பேரைச் சுட்டாமல் ஊரை மாத்திரம் சொல்லுதல் அவர்களுடைய பெருமையைப் புலப்படுத்தும். "ஊரைச் சொன்னாலும் பேரைச் சொல்லாதே’ என்ற பழமொழி இந்த வழக்கத்தை நினைப்பூட்டுகிறது.

புங்கனூர் கிழாருடைய புகழ் எங்கும் பரவியது. அவரை நாடிப் புலவரும் இரவலரும் வந்தார்கள். ஏற்றவர்களுக்கு இல்லை என்னது ஈயும் இயல்பு அவரிடம் இருந்தது.

அவர் தம் மகனுக்குக் கல்யாணம் செய்ய எண்ணிணார். நல்ல குலத்தில் பெண் பார்த்துத் திட்டம் செய்தார். தம் நிலைக்கு ஏற்ற வகையில் சிறப்பாகத் திருமணத்தை நிறைவேற்ற வேண்டுமென்பது அவர் ஆவல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முந்நீர்_விழா.pdf/85&oldid=1214790" இலிருந்து மீள்விக்கப்பட்டது