பக்கம்:முருகன் காட்சி.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. தமிழ்த் தெய்வம்

பழந் தமிழ் நிலம் நானிலம் என வழங்கப்பட்டது. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் எனத் தமிழ்மண் வகுக்கப் பெற்றுப் பெயரிடப் பட்டிருந்தது. இந்நால் வகை நிலத்திலும் வாழ்ந்த தமிழ்ப் பெருமக்கள் அவ்வந் நிலத்தில் ஒவ்வோர் தெய்வத்தை வணங்கினர். இதனைத் தொல்காப்பியனார் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்:

மாயோன் மேய காடுறை உலகமும் சேயோன் மேய மைவரை உலகமும் வேந்தன் மேய தீம்புனல் உலகமும் வருணன் மேய பெருமணல் உலகமும் முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலென்று சொல்லிய முறையால் சொல்லவும் படுமே

-தொல்காப்பியம்: அகத்திணை இயல்: 5

என்று முல்லை நிலத்திற்குத் தெய்வம் திருமால் என்றும், குறிஞ்சி நிலத்திற்குத் தெய்வம் முருகன் என்றும், மருத நிலத்திற்குத் தெய்வம் இந்திரன் என்றும், நெய்தல் நிலத் திற்குத் தெய்வம் வருணன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

- பழந்தமிழர் சமய நம்பிக்கை மிகுந்தவர்கள். இயற்கை யோடு இயைந்த வாழ்வு வாழ்ந்தவர்கள், அழகுணர்ச்சி மிக்கவர்கள். எனவே எங்கெங்கெல்லாம் அழகினைக் கண்டார்களோ அங்கெல்லாம் கோலக்குமரன் கொலு வீற்றிருப்பதாக எண்ணி வழிபாடாற்றினார்கள். குறிஞ்சி நிலம் இயற்கையழகு இணையற்றுக் குடிகொண்டிருக்கும் இடமாகும். குன்றுகளும் குன்றுகளைச் சூழ்ந்த காடுகளும் மக்கள் கண்ணினையும் கருத்தினையும் கவர வல்லன. எனவே திருமுருகப் பெருமானைத் திருமுருகாற்றுப் படையில் நக்கீரர் பெருமான் விண்பொரு நெடுவரைக் குறிஞ்சிக் கிழவ” என்று குறிப்பிடுகின்றார்.