பக்கம்:முருகன் காட்சி.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
1. முருகும் உலகும்

அமிழ்தினும் இனிய நம் செந்தமிழ் மொழி முன்னைப் பழமைக்கும் பழமையாய்ப் பின்னைப் புதுமைக்கும் புதுமையாய்ப் பொலிந்து நிற்பதாகும். தொன்மைச் சிறப்புடன் தனிப் போக்கினையும் தகைசால் இலக்கியங்களையும் தன்னகத்தே கொண்டிலங்குவது குன்றாத வாழ்வுடைய நம் தமிழ் மொழியேயாம். "அளவிலும் சுவையிலும் தமிழிலுள்ள திருப்பாடல்கள் போல், பிற இலக்கியங்களில் இல்லை” என்பது அறிஞர் கூற்றாகும். ஆங்கிலம் வணிகத்தின் மொழி என்றும், இலத்தீன் சட்டத்தின் மொழி என்றும், கிரேக்கம் இசையின் மொழி என்றும், ஜெர்மன் தத்துவத்தின் மொழி என்றும், பிரஞ்சு தூதின் மொழி என்றும், இத்தாலியன் காதலின் மொழி என்றும் கூறப்படுவது பொருந்துவது போன்று தமிழ் இரக்கத்தின் மொழி எனக் கூறுவது பொருந்தும் எனவும் உரைப்பர். எனவே தமிழ் மொழியினைப் பக்தியின் மொழி எனப் பாராட்டுவர் பெரியோர். தெய்வப்புலமைச் சேக்கிழாரும், 'ஞால மளந்த மேன்மை தெய்வத்தமிழ்' எனத் தமிழைத் 'தெய்வத் தமிழ்' என்பர். தமிழைத் தெய்வத்தோடு தொடர்பு படுத்திக் கூறும் தனிச்சிறப்பு தமிழ் மொழிக்கே உரிய தனிச் சிறப்பு தமிழ் மொழிக்கே உரிய தனிச் சிறப்பான தொன்றாம். எனவே 'சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே; அதைத் தொழுது படித்திடடி பாப்பா' என்று பாரதியாரும் தமிழைத் தொழுது படித்திடல் வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இத்தகு பழமையும் பெருமையும் தெய்வத் தொடர்பும் கொண்ட தமிழின் தொன்மை இலக்கியங்களாகத் துலங்குவன பாட்டும் தொகையும் கீழ்க் கணக்குமாகும். அவற்றிலும் பாட்டு எனக் குறிக்கப் பெறும் பத்துப் பாட்டே