பக்கம்:முருகன் காட்சி.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 முருகன் காட்சி

போலத் திசை விளக்குகின்றது. ஐந்தாவது திருமுகமோ வென்னில், தேவர்களுக்குப் பகைவர்களான அசுரர்களை அழித்து தேவர்களிடத்திலும் அசுரர்களிடத்திலும் ஒத்துச் சென்று அருள் பாலிக்கும் தன் நடுவுநிலைமையைக் கை விட்டு அசுரர்கள்பால் கறுவுகொள நெஞ்சங் கொண்டு, அவர்களைக் கொன்று களவேள்வி செய்தது. ஆறாம் முகம் குறவர் குடியில் தோன்றிய இளமைத் தன்மையும் பூங்கொடி போன்ற இடையினையும் உடைய வள்ளியம்மை யோடு கலந்து மகிழும் மகிழ்ச்சியையும் பொருந்திற்று.

இவ்வாறு, முருகப்பெருமானின் ஆறு திருமுகங்களையும் அழகுற விரித்துரைத்த கவிஞர் பெருமான் நக்கீரர், பின்னர் அப்பெருமானின் பன்னிரு திருக்கைகளின் செயல்களை அத்திருமுகங்களின் செயல்களுக்கேற்பப் பொருத்திக் காட்டுகின்றார்.

பொன்னாலும் முத்தாலும் ஆன மாலைகள் தாங்கிய அழகும் திறனும் உடைய மார்பு உத்தம இலக்கணம் அமைந்தது: வலியும், ஒலியும், வளமும் நிறைந்தது. வேல் படையை எறிந்து பகைவருடலைப் பிளந்து மீண்டும் அதனை வாங்கிக் கொண்ட புகழ்பெற்ற தோள்கள் திரு முருகனின் தோள்களாகும். வீட்டுப் பேறு அடையும் தகுதி சான்ற துறவிகள் தடையின்றி அவ்வீட்டுலகத்தை அடையுமாறு அவர்கட்குப் பாது காவலாக ஏந்தியது ஒரு கை. அதற்கினையாகிய மற்றொரு கை இடையிலே வைக்கப்பட்டது. இவை முதலாம் இணைத் திருக்கைகளின் செயல்களாகும். இரண்டாம் இனைத் திருக்கைகள், சிவந்த நிறமுடைய ஆடையை உடுத்தா நின்ற துடையின் மேலே கிடப்பவும், தோட்டியைச் செலுத்தா நிற்பவுமாயுள்ளன. மூன்றாம் இணைத் திருக்கைகள் அழகிய பெரிய பரிசையும் வேற்படையையும் வலமாகச் சுழற்ற நிற்கின்றன. நான்காம் இணைத் திருக்கைகள் முனிவர்களுக்கு எஞ்சிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முருகன்_காட்சி.pdf/56&oldid=585940" இலிருந்து மீள்விக்கப்பட்டது