பக்கம்:முருகன் காட்சி.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. கச்சியப்பர் காட்டும் முருகன்

உலகின் பழம்பெரும் சமயம் சைவ சமயமாகும், மொகஞ்சதாரோ அரப்பா இடிபாடுகளுக்கிடையில் ஒரு சிவலிங்கம் கிடைத்தது. எனவே கிறித்து பிறப்பதற்கு ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரேயே வடஇந்தியாவில் சிந்து கங்கைச் சமவெளிகளில் சிவபெருமான் வழிபாடும் வணக்கமும் இருந்திருக்க வேண்டும் என்று அறிய வருகிறோம். எனவேதான் சைவ சமயமே சமயம்’ என்றும், சைவத்தின் மேற் சமயம் வேறிலை என்றும் இச்சமயம் சிறப்பிக்கப்படுகின்றது. இவ்வாறு பழமையும் பெருமையும் கொண்ட இச் சமய உண்மைகளை உலகிற்கு உணர்த்துவான் வேண்டித் திருமுறைகளும் புராணங்களும் எழுந்தன. சைவத் திருமுறைகள் எனப்படும் பன்னிரு திருமுறைகளாம் சைவப் புராணங்களுள் சொல்லழகு, பொருளழகு, நடையழகு நனி சிறந்து கவிதைச் சிறப்புக் துலங்கும் புராணங்கள் மூன்றாகும். அவையாவன திருத் தொண்டர் புராணம் என வழங்கும் பெரிய புராணம், சிவ பெருமானின் அறுபத்து நான்கு திருவிளையாடல்களைக் குறிக்கும் திருவிளையாடற் புராணம், கந்தவேளின் கதையினை எடுத்து மொழியும் கந்தபுராணம் என்ற மூன்றுமாம்.

வேத சிவாகமங்களின் பிழிவாய் வடமொழியில் நின்றிலங்கும் நூல் ஸ்காந்தமாகும். அதனுள் ஒரு பிரிவு சங்கர சங்கிதை எனப்படும். அதில் முதன்மையான பகுதி சிவரகசிய காண்டமாகும். அஃது உற்பத்தி காண்டம், அசுர காண்டம், மகேந்திர காண்டம், யுத்த காண்டம், தேவ காண்டம், தட்ச காண்டம், உபதேச காண்டம் என ஏழு காண்டங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. இவ்வேழு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முருகன்_காட்சி.pdf/98&oldid=585987" இலிருந்து மீள்விக்கப்பட்டது