8
இயற்கையே புவன மென்பர் இறைவனொன் றுண்டோ வென்பர்
செயற்கையே உயர்வா மென்பர் தீஞ்சுவை நூல்க ளெல்லாம்
வியர்த்தமே யென்பர் வெல்ல வகையறி யார்க்ள் உண்மை
கயற்கணாள் உமையா ளின்ற கந்தனே கழறு வாயே.
உண்ணுவ ரல்லர் நல்ல உடையுடுப் பவரு மல்லர்
நண்ணுவ ரல்லர் பக்தி நாத்திகச் செயலே செய்வர்
எண்ணிலாத் தீமை யெய்தி ஏழைமீ திரக்கங் கொள்ளாக்
கண்ணிலாக் கயவர் தம்பால் கந்தனே பொருளேன் தந்தாய்.
ஆலயஞ் செல்லா ருந்தன் அருள்பெற வாசை கொள்ளார்
வேலடுங் கண்ணார் தம்பின் வீணராயலைவர் வெய்ய
காலனார் கொடும்பா சத்தால் கலங்குவ ரந்தோ
ஏழைப் பாலரைப் படைத்தி ரேனோ பழநியம் பதிவாழ் கோவே,
ஒழுக்கமே கொள்ளார் மேலோர் உயர்குணந் தழுவார் தீய
அழுக்கறத் தூய வாழ்வும் அறநிறை நெறியுங் காணார்
இழுக்குதற் கஞ்சார் செல்வம் சட்டலே குறியாக் கொள்வர்
வழுக்கியே அறவாழ் வெய்தும் வகையறி யார்கள் அந்தோ.
வள்ளுவப் பெரியார் கூறும் வாய்மொழி கேளார் பெற்ற
உள்ளுயி ரனைய நூல்கள் உண்மையைக் காணார் பின்னர்
எள்ளுவர் அறிஞர் தம்மை எதிர்த்துதாம் எதிர்வா தாடித்
துள்ளுவர் தாமே கற்ற துரையெனச் சழக்கர் மாதோ,
ஒருதொழில் செய்வர் ஆங்கே உறுஜெயம் பெற்றா ராயின்
பெருமைபெற் றலைவர் தாங்கள் பீடுடன் முயன்றோ மென்பர்
கருதியப் பணியில் வென்றி காண்கில ராகில் வீணில்
முருகனே கெடுத்தா யென்று முறையிடு வார்கள் அந்தோ.
புண்ணியா! உலகில் மாந்தர் பொருளுடை யார்கள் தம்பால்
நண்ணுவர் வார்த்தை யின்பம் நவின்றவர் பொருள்ப றிக்க
எண்ணுவர் முடிவில் எண்ணம் இசையிலென் றழுக்கா றுற்றுப்
பண்ணுவர் தீமை என்னே! பாதகச் செயல்கொண் டாரே.
எண்ணுவ ரொன்று முன்னே இயம்புவர் வேறு பின்னே
நண்ணியே வந்தே மென்பர் நண்பனே யென்பர் ஒன்றை
எண்ணியே நிற்பர் ஆங்கு எண்ணுவ தடையா ராகில்
மண்ணிடை துாற்றி நிற்கும் மாந்தருக் கென்சொல் கேனோ,