பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாத்திகனாம்; நல்லிளைஞர் பிஞ்சு நெஞ்சை நஞ்சாக்கி விட்டேனாம்; அவருள் ளத்தில் காத்திருந்து கன்னக்கோல் வைக்கின் றேனாம்; கதைக்கின்றார். நானென்ன கன்னிப் பெண்ணாடி பாத்தியிலே தலைநீட்டும் களைகள், நல்ல பயிர்ச்செடியை அழிப்பதற்கு நிற்ப தைப்போல் காத்திருக்கின்றார் என்னை அழிப்பதற்கு. கட்டாரி நீட்டுகின்றார் முதுகுப் பக்கம்! செருப்பெனக்கு வெறுங்கால்கள்; வானக் கூரை சிந்துகின்ற பனிவியர்வை எனக்குப் போர்வை. சுருக்கத்தை என்வயிறு பெற்ற தன்றிச் சுவையுணவைப் பெற்றதில்லை; பசியால் மேனி உருக்குலைந்த காலத்தும் பிறர்க்குத் தீமை உள்ளத்தால் நினைத்ததில்லை; பணத்தைத் தேடித் தெருத்தெருவாய் அலைந்ததில்லை; எனது நேர்மைத் திறத்துக்கு வறுமையொன்றே சான்று போதும். வில்லாற்றல் வீரனுக்கு வெற்றி, பெண்டிர் விழியாற்றல் காதலுக்கு வெற்றி; தேனைச் சொல்லாக்கித் தருகின்ற புலவ னுக்குச் சுவையாற்றல் தான்கவிதை வெற்றி; வெல்லும் சொல்லாற்றல் பெற்றிருக்கும் எனக்கு முன்னால் சுள்ளியைப்போல் ஒடிந்தவர்கள் ஒன்றாய்க் கூடி மல்லுக்கு நிற்கின்றார்; சேற்றில் யானை மடிகிறது! மாய்க்கிறது நரியின் கூட்டம்! கவிஞர் முருகுசுந்தரம் 264