பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா.பா.

105



'இது ரொம்பத் தந்திரமான முயற்சிங்க! அதிகம் பாப்புலரா இருக்கிற பக்கத்து வீட்டுக்காரங்களோட எந்த விதமான பாப்புலாரிட்டியும் இல்லாத உங்களையும் மாட்டி வைக்கிருங்கன்னா இதிலே ஏதாவது சூழ்ச்சி இருக்கணும்! அதுனாலே நீங்க யோசிச்சு அவங்களை மாட்டி வைக்கிற மாதிரிப் பேட்டியைக் கொண்டு போகணும். அதே சமயத் திலே உங்க பேட்டியைப் படிச்சிட்டு லீகலா அவங்க உங்க மேலே டேமேஜ் கிளெய்ம் அது இதுன்னு போறப்லவும் பிடி குடுத்துடப்படாது'-என்றான் உண்மை விளம்பி, அவன் குரலில் ஆவேசமே இருந்தது.

"ஆமாங்க! அவரு சொல்றது நூறு விழுக்காடு சரியான கருத்துங்க! அவங்க நம்மைப் பத்தி மோசமான அபிப்ராயம் தான் சொல்லியிருக்கப் போறாங்க. நாம மட்டும் அவங்களை ஏன் விட்டு வைக்கணும்? மானம் போற மாதிரி விளாசித் தள்ளிப்புடனும். நான் தந்திரமான வாக்கியங்களிலே எழுதியே குடுத்துடறேன். அதை அப்படியே எடுத்திட்டுப் போயி, 'இதுதான் பக்கத்து வீட்டுக்காரங்களைப் பத்தி என் அபிப்ராயம்னு குடுத்திடுங்க'- என்று பேட்டியை எழுதித் தருவதற்கே முன் வந்தார் புலவர்.

கண்ணனுக்கும் அவர்கள் இருவரும் சொல்வதுதான் சரி என்று பட்டது. இதுமாதிரிப் பேட்டி கொடுக்கிற அளவு தான் பெரிய மனிதன் இல்லை என்று அவன் நினைத்தாலும் அவர்களுக்குப் பக்கத்து வீட்டுக்காரனான தன்னைப் பற்றி அவர்கள் மோசமான கருத்துக்களைச் சொல்லியிருப்பார்களே யானால் அதற்குப் பதிலாகவாவது இந்தப் பேட்டி பயன் படட்டும் என்று புலவரையும் நண்பனையும் அதைத் தயாரிக்குமாறு அந்த வேலையை அவர்களிடம் ஒப்படைத் தான். நண்பன் தலையைச் சொறிந்தான்:

‘‘மன்னிக்கணும் கண்ணன்! இதுமாதிரி அஸைன் மெண்ட்டுக்கு எனக்குக் கொஞ்சம் ஒரு தினுசான இன்ஸ்பிரேஷன் தேவைப்படும்...'