பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா.பா.

181

கொண்டேவந்தது. இருட்டில் தீப்பெட்டி வைத்திருந்த இடத்தைத் துழாவியபோது அது நழுவித் தண்ணிரில் விழுந்து விட்டது. கைவிளக்கோ, மெழுகுவத்தியோ கொளுத்த வழி இல்லை.

இருட்டில் ஒன்றும் நினைத்த வேகத்துக்கு நடக்க வில்லை. குழந்தையும் கட்டிலும் தண்ணிரில் நனைவதற்கு இன்னும் கால் அடி தண்ணிர்தான் பாக்கி. சுகன்யா பதறிப் போய்க் குழந்தையை எடுத்துத் தோளில் சாத்திக் கொண்டாள். வேறு எதுவும் தோன்றவில்லை. வாசலிலிருந்து தண்ணிரில் யாரோ நடந்து வரும் ஓசையும் டார்ச்சுகளின் ஒளியும், “சுகன்யா! சுகன்யா! சீக்கிரம் குழந்தையை எடுத்துக்கிட்டு வெளியே ஒடி வாங்க. செம்பரம்பாக்கம் ஏரியை உடைச்சு விட்டிருக்காங்க. காலனியிலே வெள்ளம் பூந்திடிச்சு. எங்க வீட்டு மாடிக்குப் போயிடலாம் வா” என்று அம்மிணி அம்மாளின் குரல் மங்கலாகக் கேட்டது.

மழை ஓசை, தண்ணிர் பாயும் ஓசை எல்லாம் பயங்கர மாக இருந்ததால் அந்தம்மாள் மிக அருகிலே இருந்து கத்தி யும் அது பெரிதாகக் கேட்கவில்லை. “இதோ வந்திட்டேம்மா” என்று அந்தம்மாளுக்குப் பதில் குரல் கொடுத்துக் கொண்டே,

“ஏங்க... கூப்பிடறாங்களே, என்ன செய்யட்டும்?” என்று சுகன்யா மெதுவாகக் கணவன் காதருகே கேட்டாள்.

அப்போதே இருவரும் முழங்காலளவு தண்ணிரில் நின்று கொண்டிருந்தார்கள். தண்ணிர் ஏறியபடி இருந்தது. வீட்டுக்குள் நீர் அகல மோதியது. அவன் முகம் கடுமையாகியது.

“நான் வரலே. வர மாட்டேன் நீ வேணாப் போய்க்க.”

“என்னங்க இது? இந்த ஜுரத்திலே இப்படி அடம் பிடிக்காதீங்க. ஆபத்துக்குப் பாவமில்லே. உங்க பழைய விரோதத்தை எல்லாம் வெள்ளம் வடிஞ்சப்புறம் வெச்சுக்கலாமே?”