பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பா

155


சந்தித்துப் பழகுமிடங்களில் மிகவும் முக்கியமானதாக ‘வசந்த மண்டபம்’ என்று செல்லமாக அழைக்கப்பட்ட ‘போஸ்ட் கிராஜுவேட்ஸ் லைப்ரரி’ விளங்கியது. இந்த நூல் நிலையத்தில் ஒரு விரோதமான சூழ்நிலையில் கனக ராஜூம், சுலட்சணாவும் சந்தித்துக் கொண்டாலும் பின்பு மெல்ல மெல்ல அந்த விரோதம் மாறி நட்பாகியது.

திடீரென்று தன் தாய்க்கு உடல்நிலை மோசமாகி விட்டது என்று ஊர் சென்ற கனகராஜ் தாயை இழந்து பதினேந்து நாட்களுக்குப் பின் தான் மறுபடி பல்கலைக்கழகம் திரும்பினன். மொட்டைத் தலையும் அதை மறைக்கும் ஃபர் குல்லாயும், சோகம் தேங்கிய முகமுமாகத் திரும்பியவனைச் சுலட்சணா . தானே தேடிச் சென்று சந்தித்து அவன் தாய் இறந்தது பற்றித் துக்கம் விசாரித்துத் தன் அநுதாபங்களைத் தெரிவித்தாள். ஊருக்குப் போவதற்குமுன் அவன் ஞாபகமாகப் புத்தகத்தைத் தனக்குக் கொடுத்து அனுப்பியதைப் பாராட்டினாள் . தனக்கு அதனால் பேராசிரியரிடம் நல்ல பெயரும் இன்டேர்னல் அஸெஸ்மென்டில் மதிப்பெண்களும் கிடைத்ததை நன்றியுணர்வோடு அவனிடம் சொன்னாள் .

அதன் பின் நூல் நிலையத்திலும் பல்கலைக் கழகப் பொடானிகல் கார்டனாக விளங்கிய பூங்காவிலும் அவர்கள் தொடர்ந்து சந்தித்தார்கள். பேசினர்கள், பழகினர்கள். பாடம், வகுப்பு, அகடெமிக் விஷயங்கள் பற்றியும், திரைப் படம், அரசியல், இலக்கியம், பத்திரிகைகள் எல்லாம் பற்றியும் பேசினார்கள், விவாதித்தார்கள். சில கருத்துக்களில் ஒன்றுபட்டார்கள். பலவற்றில் வேறுபட்டார்கள்.

சிலவற்றில் இருவர் இலக்குகளும் வேறு வேறு திசையாயிருந்தன. கனகராஜூம் அவளும் நெருங்கிப் பழகினாலும் அவர்களிடையே அடிப்படை வேறுபாடுகள் நிறைய இருந்தன. கனகராஜ் எல்லாவற்றிலும் ஒரு ஃபண்டமெண்ட லிஸ்ட் ஆக இருந்தான். பயந்து பயந்து பழகினான்.