பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பா

159

வருவார்கள். முகம் சுளிக்காமல் எழுந்து முதலுதவி செய்து அவர்களோடு ஆஸ்பத்திரிக்கும், போலீஸ் நிலையத்திற்கும் அலைவார் அவள் தந்தை.

தொழிலாளிகள் விஷயமாகச் சலிப்போ, தளர்ச்சியோ அவருக்கு வருவதேயில்லை. அவர்களுக்காகக் கோர்ட்டுக்கும், காவல் நிலையத்துக்கும், ஆஸ்பத்திரிக்கும் அலைவதையே ஒரு வாழ்க்கை முறையாகக் கற்றுப் பழகித் தேர்ந்திருந்தார் அவர். அவரோடு கூடவே இருந்து பார்த்துப் பழகி அநுபவித்திருந்த காரணத்தால்-பிறருக்காகச் சிரமப்படுவதிலுள்ள மகிழ்ச்சிகள் சுலட்சணாவுக்கு நன்கு புரிந்திருந்தன. அவள் எந்தப் பிரச்னையிலும் அப்படிச் சிரமப்பட ரிஸ்க் எடுத்துக் கொள்ளத் தயாராயிருந்தாள். சமூகப் பிரச்னைகளிலிருந்து ஒதுங்கிப் போகிறவர்களும், விலகிப்போகிறவர்களும் கோழைகள் என்று அவள் நம்பினாள். உணர்ந்தாள். செயல் பட்டாள்.

பல்கலைக்கழக எல்லையில் கனகராஜூம் அவளும் சந்திப்பது மழகும் விதம் இவற்றா ல் அவர்கள் காதலர்கள் என்று புரிந்து கொள்ளப்பட்டிருந்தாலும் இருவருக்கும் நிறைய வேறுபாடுகள் இருந்தன.

அவன் கருதினான்: ‘சமூகம், பிரச்னை, போராட்டம் எல்லாம் மாணவர்கள் சம்பந்தப்படாத பிரச்னைகள். படிப்பில் அக்கறையில்லாத மாணவர்கள் சிலர் இப்படிப்பட்டவற்றைக் கட்டிக்கொண்டு அழுவதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை. படிக்கிற மாணவனுக்குப் படிப்பு ஒன்று மட்டுமே முக்கியப் பிரச்னை, மற்றவை எல்லாம் படிப்பைத் தட்டிக் கழிக்கிறவர்கள் செய்கிற காரியங்களே’

ஆனால் அவனது இந்த இலக்கணத்தில் அடங்காதவளாக இருந்தாள் சுலட்சணா. அவள் படிப்பில் படு கெட்டிக்காரியாக இருந்தாள். மற்றப் பிரச்னைகளிலும் அதிக அக்கறை காட்டினாள்.