பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பா.

167

“மிஸ்டர் கனகராஜ்! இங்கே படிக்கிற பெண்களின் மானம் மரியாதை என்பவை நான் ஒருத்தி ‘ரேங்க்’ வாங்கு வதைவிட மிகவும் அத்தியாவசியமான விஷயங்கள். பிறர் கூடி வந்து வேடிக்கை பார்க்கிற அளவு லேடிஸ் ஹாஸ்டல் பெண்களைத் திறந்த வெளியில் குளிக்க வைத்த நிர்வாகத்தை எதிர்ப்பது சரியா, நான் ரேங்க் வாங்குவது சரியா என்றால் எனக்கு ரேங்க் வாங்குவது பெரிய காரியமே இல்லை.”

“மன்னியுங்கள்! உங்கள் மேலுள்ள பிரியத்தில் நான் கொஞ்சம் அதிக உரிமை எடுத்துக்கொண்டு பேசவிட்டேன் போலிருக்கிறது”

அப்போது அவள் குரலில் சூடு ஏறியதைக் கண்டு கனராஜ் தணிந்துபோய் மன்னிப்புக் கேட்டான். அவன் இப்படி மன்னிப்புக் கேட்டதைக் கண்டு அவளுக்கு அவன் மேல் இரக்கமாகக்கூட இருந்தது. அப்பாவியாகிய அவனைப் பொதுக் காரியங்களில் அக்கறை, சமூகப்ரக்ஞை, பிறர் நலச் சிந்தனை ஆகியவை கொஞ்சமும் இல்லாத கட்டுப் பெட்டியாக வளர்த்துள்ள அவன் குடும்பத்தினர் மேல்தான் அவளுக்குக் கோபம் கோபமாக வந்தது.

இவன் எடுப்பாய் இளமையாய் அழகாயிருக்கிறான். நல்ல உயரம், நல்ல நிறம், அரும்பு மீசை, புன் முறுவல் திகழும் மலர்ந்த முகம் எல்லாம் இருந்தும் இவனிடம் இருதயமே இல்லையே? இருதயமே இல்லாதவனிடம் இத்தனயும் இருந்தும் என்ன பிரயோசனம் தான் செய்தது தவறு என்று கூட இவனுள் உறைக்கவில்லையே! முழு யூனி வர்ஸிடியும் மாணவிகளின் உண்ணுவிரதப் போராட்டத்தில் அநுதாபம் கொண்டு அவளுக்குப பக்கபலமாக அநுதாப உண்ணு விரதம் என்று வந்து போராட்டத்தில் கலந்து கொண்டபோது இவன் சும்மா அந்த மரத்தடிக்கு வந்து உபசாரமாக ஒரு வார்த்தை கூடச் சொல்லிவிட்டுப் போக-