பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

180

சுலட்சணா காதலிக்கிறாள்


அதை மறுத்து அவனிடமே திருப்பிக் கொடுத்து விட்டாள் சுலட்சணா

அவன் இதை எதிர்பார்க்கவில்லை. திடீரென்று முகத்திலறைந்தாற் போலிருந்தது. சமூகப் பணி முகாம் நடத்துவதற்காக அவள் மாணவ மாணவிகளிடம் நிதி வசூலிப்பதை அவன் அறிந்திருந்தான். அவளுக்கு அதில் உதவியாயிருக்கட்டும் என்றுதான் அவன் ஐநூறு ரூபாயைத் தூக்கித் தயங்காமல் கொடுத்திருந்தான். அவளோ ஒரே விநாடியில் அவனது பெருந்தன்மையைத் தூள் தூளாக்கி விட்டாள்.

அவன் சற்று ஆத்திரமடைந்த குரலிலேயே,

“எல்லாரிடமும் பணம் வசூல் செய்கிறாயே, நான் கொடுப்பதை மட்டும் ஏன் வாங்க மறுக்கிறாய்"-என்று அவளைக் கடுப்போடு கேட்டான்.

நெற்றி வேர்வை நிலத்தில் விழ உழைப்பதற்கு நான் வரமாட்டேன்! பணம் வேண்டுமானால் தருகிறேனென்று முன் வருகிற ஆட்களாகப் பார்த்து வசூல் செய்தால்-இதற்குச் சமூக சேவை என்று ஏன் பெயரிட்டு அழைக்க வேண்டும்? நன்கொடை வசூல் செய்து யாராவது ஒரு சாலைக் காண்ட்ராக்ட் என்ஜினியரிடம் கொடுத்து அவரையே ரோடு போடச் சொல்லி விட்டு விடலாமே? அதுவல்ல எங்கள் நோக்கம். எம். ஏ. யும் எம். ஃபில்லும், எம். டெக். கும், எம். டி. யும் படிக்கிற மாணவர்கள் வசமும் மண்வெட்டி பிடித்து உழைக்கிற மனமும் உடலும் உண்டு என்பதை நிரூபிக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறோம். இதில் பணமே மனிதனுக்கு ப்ராக்ஸியாக நின்று விட முடியாது, கூடாது என்பதுதான் என் கொள்கை"-

“இது மிகவும் விநோதமான கொள்கைதான்."

“விநோதமான மனிதர்களுக்கு எல்லா நல்ல கொள்கைகளும் கூட விநோதமாகவே தோன்றும்; இயல்பாகத் தோன்றாது"-