பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

184

சுலட்சணா காதலிக்கிறாள்


பரபரப்பான பஜாரில் காய்கறி கூறுகட்டி வைத்து விற்றுக் கொண்டிருந்த ஓர் இளம் பெண்ணை அந்தப் பக்கத்துப் பேட்டை ரவுடி ஒருத்தன் தலைமுடியைப் பிடித்து இழுத்துக் கன்னத்தில் அறைந்து கொண்டிருந்தான். மற்றவர்கள் காது கொடுத்துக் கேட்கக் கூசும் அநாகரிகமான வார்த்தைகளால் அவளைத் திட்டிக் கொண்டிருந்தான். இவ்வளவுக்கும் அது மாலை நேரமாகையினால் பஜாரில் நல்ல கூட்டம். ஆனால் யாரும் அந்தப் பேட்டை ரவுடியை ஏனென்று தட்டிக் கேட்க முன்வரவில்லை. எதுவுமே நடக்காதது போல் எதையுமே கண்டுகொள்ளாமல் மக்கள் அந்த இடத்தைக் கடந்து போய்க் கொண்டிருந்தார்கள், வந்து கொண்டிருந்தார்கள்.

‘நிராதரவான இளம் பெண் ஒருத்தியை நடுத்தெருவில் துகிலுரியாத குறையாக ஒருத்தன் இம்சை பண்ணி மான பங்கப்படுத்திக் கொண்டிருக்கிறான். ஏன் என்று கேட்பாரில்லையா?'— என்று மனக் குமுறலோடு தயங்கி நின்றாள் சுலட்சணா, கனகராஜ் அவள் காதருகே முணுமுணுத்துத் துரிதப்படுத்தினான்.

“நேரம் சரியாயில்லை. இப்போ இங்கே நிற்க வேணாம் பெரிய கலாட்டா வரும் போல இருக்கு. கண்டுக்காமப் போயிடலாம், வா."

இதைக் கேட்டுச் சுலட்சணாவுக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. கண் முன்னால் நடக்கிற ஓர் அக்கிரமத்தை—அநியாயத்தை—அநாகரிகத்தை ஏனென்று கேட்காமல் ‘நமக்கேன் வம்பு? கண்டுக்காமப் போயிடலாம்' —என்று உபாயம் சொல்கிற ஆண் பிள்ளையை ஏறிட்டுப் பார்க்கவே அருவருப்பாயிருந்தது அவளுக்கு.

கனகராஜின் முகத்தில் கலவரமும் பீதியும் தெரிந்தன. உடனே அங்கிருந்து ஓடிவிட வேண்டும் போன்றதொரு தப்பிப் பிழைக்கும் அவசரம் அவன் முகத்தில் தெரிந்தது. அந்தப் பெண்பிள்ளேயை ரவுடி இம்சைப்படுத்திக் கொண்டிருந்த அதே பிளாட்பாரத்தில் லத்திக்கம்பு சகிதம்