பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பா.

187

சாயப்பிரிவு மாணவர்கள் மேல் அரிவாளோடு பாய்ந்தான். அதை அவர்கள் முற்றிலும் எதிர்பார்க்கவில்லை. பேச்சில் ஆரம்பித்த தர்க்கத்தை உடனே அவன் அரிவாளால் எதிர்கொள்வான் என எதிர்பார்த்திராத அவர்களில் மூவர் மருண்டு சற்றே பின்வாங்கினர். அபாரமான துணிச்சலும் அரிவாளுக்குப் பயப்படாத ஆண்மையுமுள்ள ஒருவன் மட்டும் ஓங்குகிற அரிவாளோடு வந்த அந்த ரவுடியின் வலது கையை அப்படியே மறித்துத் தடுத்துப் பிடித்தான்.

அந்த மாணவனைச் சுலட்சணாவுக்கே நன்றாகத் தெரியும். அவளுடைய சமூக சேவை முகாம், ஹாஸ்டல் உண்ணா விரதம் எல்லாவற்றிலும் ஆர்வமாக முன்வந்து கலந்து கொண்டவன். வீராசாமி என்று பெயர்கூட நினைவு இருந்தது. ஊர்கூட முதுகுளத்தூர்ப் பக்கம் என்பதாகவும் நினைவிருந்தது. அப்போது அவன் காட்டிய வீரம் அவளை வியப்பிலாழ்த்தியது. “நடுத்தெருவிலே பொம்பளையைக் கை ஓங்கி அடிக்கிற நீயும் ஒரு மனுசன்தானா?”—என்று வரிந்து கட்டிக்கொண்டு அந்த ரவுடியை மடக்கிப் பிடித்து விட்டான் வீராசாமி. ஒற்றைக்கு ஒற்றையாக அரிவாளும் கையுமாக இருந்த அந்த முரடனைச் சமாளித்தான் அவன். ஆனால் கண் இமைக்கும் நேரத்தில் வேறுமாதிரி நடந்து விட்டது. வீராசாமி தன்னை மடக்கிவிட்டான் என்ற ஆத்திரத்திலும் அவமானத்திலும் சிறிய ரவுடி திமிறிக்கொண்டு பாய்ந்தான். உடனே ஓர் அலறல் அதைத் தொடர்ந்து அடுத்த நொடியில் இரத்தம் சொட்டச்சொட்ட ஒரு இளம் வலதுகை நடுரோட்டில் துண்டிக்கப்பட்டு வந்து விழுந்தது.

என்ன நடந்தது என்று புரியவே சில நொடிகள் ஆயிற்று. ரவுடி ஓடி விட்டான். விவசாய மாணவர்கள் அவனைத் துரத்திக் கொண்டு பாய்ந்தனர். வீராசாமி மட்டும் வெட்டுண்ட கையில் குருதி ஒழுகத் துடிதுடித்தபடி விழுந்து கிடந்தான். நடைபாதைப் பெண்ணும் சுலட்சணாவும் அவனைத் தாங்கிக் கொண்டார்கள். சுற்றிலும் கூட்டம் கூடி