பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா.பா.

17



உடைத்துவிடலாமா என்று நாக்குத் துறுதுறுத்தது. அதற்கெல்லாம் என்ன ஆதாரம் என்று செயற்குழு உறுப்பினர்கள் தன்னக் குடைந்தால் என்ன செய்வது என்ற ஒரே ஒரு தயக்கம் மட்டுமே சிறிது தடுத்தது.

அச்சுதன் மறுபடி ஆரம்பித்தார்:

"ஒருத்தரை நமக்குப் பிடிக்கலேன்ன அது தனிப்பட்ட விஷயம். அதனாலே இந்த அஸோஸியேஷனுக்கும் அவங்களைப் பிடிக்கலேன்னு ஆயிடாது. அஸோஸியேஷன் விஷயத்திலே நம்ம சொந்த விருப்பு வெறுப்புக்களைக் கொண்டு வரக்கூடாது.'"

தன் பக்கத்து வீட்டுப் பெண்மணியான அம்மிணி அம்மா மீது கண்ணனுக்கு ஏதோ தனிப்பட்ட விரோதம். அதனால் தான் அவன் அந்த அம்மாள் காலனி நலம் நாடுவோர் சங்கத்தில் சேரவிடாமல் தடுக்கப் பார்க்கிறான் என்பதுபோல் ஒரு தவறான கருத்து அந்தச் செயற்குழுவில் எல்லாருக்கும் ஏற்பட்டுவிட்டது. அப்படி ஒரு கருத்து ஏற்படாமல் தடுக்கவோ தவிர்க்கவோ கண்ணனாலும் முடியவில்லை.

“எனக்குத் தனிப்பட்ட முறையிலே அவங்களோட ஒரு விரோதமும் இல்லை. அஸோஸியேஷன் பேர் கெட்டுடப்படாதுன்னுதான் தயங்கினேன். நீங்கள்ளாம் சேர்ந்து அவங்களை மெம்பராக்கணும்னு ஆசைப்பட்டிங்கன்னாச் சேர்த்துக்கவேண்டியது தானே?' என்று முடிவில் ஒருவிதமாய்ப் பட்டும் படாமலும் சொன்னான் அவன்.

"ஆல் ரைட்! நீங்க ஏன் சேர்க்கக் கூடாதுங்கறத்துக்கு இன்னும் வலுவான காரணமா எதையுமே சொல்ல மாட்டீங்ககறீங்களே? ஏதோ அப்பிடிக் கேள்விப்பட்டேன். இப்பிடிக் கேள்விப் பட்டேன்னு சொல்றது சரியான காரணமில்லை. ஒவ்வொருத்தரைப் பத்தியும் ஒண்ணொன்ணு கேள்விப் படறது உலகத்திலே சகஜம். அதை வச்சு எதையும் முடிவெடுக்க முடியாது மிஸ்டர் கண்ணன்!"