பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

194

சுலட்சணா காதலிக்கிறாள்


அந்த ரவுடியோடு சண்டை போடப்போன தனக்கு ஆதரவாகப் பரிந்துகொண்டு வரப்போய்த்தானே வீராசாமிக்கு இந்தக் கதி நேர்ந்தது? என்றெண்ணி எண்ணி வேதனையில் தவித்தாள் அவள். மாணவர்களுடைய ஒற்றுமைக்குப் பயந்து பல்கலைக்கழக நிர்வாகம் வீராசாமியைத் தொடர்ந்து உடல் ஊனமுற்ற மாணவனாகக் கல்வி பயில அநுமதிக்கும்படி நேர்ந்தது.

அங்கே துணைவேந்தர் இப்படி விஷயங்களில் கருணை காட்டி வழக்கமே இல்லை. டீனாக இருக்கும் ‘கையாடல்' வல்லான் பிள்ளையும் பெரிய குடும்பத்துப் பிள்ளைகள், பணக்கார மாணவர்களை விரும்பியே காலந்தள்ளியவர். விவசாயப் பட்டப்படிப்பில் தியரி தவிர வயலில் இறங்கி வேலை செய்யும் பிராக்டிகல் ஒர்க், ஃபீல்டு ஒர்க் எல்லாம் நிறைய இருப்பதால் ஆஸ்பத்திரிலிருந்து ‘டிஸ்சார்ஜ்' ஆகி வந்ததும் வீராசாமிக்கு டி. சி. கொடுத்து அனுப்பிவிடுவது என்று முடிவு செய்து வைத்திருந்தார்கள்.

‘இன்னும் ஒரே ஒரு வருஷப்படிப்புத்தான் மிச்சமிருந்தது. நடுவே இப்படி ஒரு விபத்து நேர்ந்ததற்காக அவன் படிப்பைத் தொடர விடாமல் செய்வது மனிதாபி மானம் ஆகாது! விதி விலக்கு அளிக்க வேண்டும்'- என்று மாணவர் கவுன்ஸில், உடல் ஊனமுற்றோர் சங்கம் எல்லாம் வற்புறுத்தியதன் காரணமாக வி. சி. வழிக்கு வந்தார்.

வீராசாமி அதே பல்கலைக்கழகத்தில் படிப்பைத் தொடர்ந்தான். ஒரு மாதத்திற்குப் பின் ஒருநாள் தற்செயலாக ஒரு மாலை வேளையில் பல்கலைக் கழகப் பூங்காவில் அவனைச் சந்திக்க நேர்ந்தபோது பலவிஷயங்களைப் பேசிக் கொண்டிருந்து விட்டு முடிவில் விடைபெறும்போது, “பை தி வே...உங்க மோதிரம் ஒண்ணு எங்கிட்ட இருக்கு வீராசாமி! ஆஸ்பத்திரியிலே நீங்க அனெஸ்தீஸியாவிலே இருந்தப்போ நர்ஸ் கொடுத்தாங்க"- என்று சுலட்சணா அந்தச் செம்பு மோதிரத்தை எடுத்து அவனிடம் நீட்டினாள்.