பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பா.

197


மனிதர்கள் நாகரிகம் அடைந்துவிட்டதாகச் சொல்கிறார்கள். இன்னும் மரம் வெட்டுகிற அரிவாளால் மனிதர்களை வெட்டுவதையும், கல்லால் அடிப்பதையும், துச்சாதனன் சபையில் செய்ததைச் சந்தையிலும் கடைத்தெருவிலும் பெண்களுக்குச் செய்வதையும் யாரும் குறைத்துக் கொள்ளவில்லை. சமாதானம், சகவாழ்வு, மனிதனுக்கு மனிதன் விட்டுக் கொடுப்பது எல்லாவற்றையும் பற்றிப் பேசிக் கொண்டே பிலிஸ்டைன்களாக - காட்டுமிராண்டிகளாக - வாழ்கிறோம் நாம்."

“சற்றுமுன் இந்த மோதிரத்தை என் கையால் உங்களிடம் எடுத்துக் கொடுக்கமுடியாதபோதுதான் எனக்கு வலது கை போய்விட்டது என்பதே நினைவு வந்தது சுலட்சணா!"

“எனக்காகத்தான் வலது கையை இழந்தீர்கள் என்பதால் நானே உங்களது வலது கையாக விளங்குவேன். கவலை வேண்டாம்." என்று தோல் சூம்பிப்போய் மூளியாயிருந்த அவனது வலது கையைக் குனிந்து கண்களில் ஒற்றிக் கொண்டாள் சுலட்சணா. வீராசாமி முழுக்கைச் சட்டை அணிந்திருந்ததால் வலது பக்கக் கைப்பகுதியை மறைத்துக் கொண்டு சட்டையின் கீழ்ப்பகுதி தனியே தொங்கியது.

சுலட்சணா தனக்குள் நினைத்தாள். ‘புற அழகு என்று வந்து விட்டால் இவனுக்கும் கனகராஜுக்கும் ஆயிரம் வித்தியாசங்கள். அவன் நல்ல ரோஜாப்பூ நிறம். இவன் கருப்பு. அவன் சிரித்த முகமாயிருப்பான். இவன் முகத்தில் ஒருவிதமான கடுமை இருக்கிறது. படிப்பில் அவன் புலி. இவன் படிக்கிற படிப்பே வேறு. அக்ரிகல்ச்சர் மாணவனின் படிப்பில் பொருளாதார மாணவனின் திறன்களையோ, நுணுக்கங்களையோ எதிர்பார்க்க முடியாது."

ஆயிரம் வேறுபாடுகள் இருந்தாலும் வீராசாமியின் ஒரு

மு-13