பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

210

சுலட்சணா காதலிக்கிறாள்



விஷயத்தில் தான் கொஞ்சம் அக்கறைகாட்டி உரிமை எடுத்துக்கொண்டு பாடுபட்டால் அவனுடைய தந்தையை இம்ப்ரெஸ் செய்யலாம்; அதன் மூலம் அடுத்த துணை வேந்தர் பதவிக்காகச் சிபாரிசு செய்யப்படும் பெயர்களில் தன்னுடைய பெயர் முதலாவதாயிருக்க வழி செய்து கொள்ள முடியும். இது அவருடைய நீண்டநாள் பேராசையாக இருந்தது.

டாக்டர் (கை)யாடல் வல்லான் பிள்ளையின் மூளை குறுக்கு வழியில் யோசனை செய்தது. கனகராஜை அனுப்பிய பின். பல்கலைக்கழக நேரமாயில்லாமல் அகாலமாயிருந்தும் ஒரு பியூனை அனுப்பி சுலட்சணாவை உடனே லேடிஸ் ஹாஸ்டலிலிருந்து அழைத்து வரச் செய்தார்.

ரெஸிடென்ஷியல் பல்கலைக் கழகமாயிருந்தாலும் ஒரே காம்பஸ்-ற்குள் டீனின் வீடு, லேடிஸ் ஹாஸ்டல், பேராசிரியர்கள் குடியிருப்பு, துணேவேந்தர் மாளிகை எல்லாம் இருந்ததாலும், இப்படி மாணவர்களைப் பொறுப்பிலுள்ளவர்கள் அழைத்துப் பேசுவதும், பொறுப்பிலுள்ளவர்களை மாணவர்கள் வந்து காண்பதும் அவ்வப்போது வழக்கம்தான், அதில் புதுமை ஒன்றுமில்லை.

பல்கலைக்கழகத் துனைவேந்தர் முக்கால்வாசி நாள் வெளி நாட்டுப் பயணங்களிலேயே இருந்ததனால் ஃபாரின் வைஸ்சான்ஸைலர்"--என்றே பேராகி இருந்தது. மாணவர்கள் சம்பந்தப்பட்டவற்றை விசாரிப்பதும், நடவடிக்கைகள் எடுப்பதும் அவ்வப்போது ஆக்டிங் துணை வேந்தராயிருக்கும் கடல் பிள்ளை'யின் வேலைதான். அதனால் ஆக்டிங் வி. சி. கூப்பிட்டனுப்புவது பற்றி மாணவர்கள் பயமோ பதற்றமோ அடைவது கிடையாது. எப்போது கூப்பிட்டாலும் உடனே போய்ப் பார்ப்பார்கள்.

இன்று சுலட்சணாவும் அப்படித்தான் அவர் கூப்பிட்டனுப்பியதும் மறுக்காமல் உடனே அவரைப் பார்க்க வந்தாள்.