பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா.பா.

211

அவள் தேடி வந்தபோது அவர் உள்ளே சாப்பிட்டுக் கொண்டிருந்ததனால் அரை மணி நேரம் காத்திருக்க வேண்டியதாயிற்று, கிராமந்தரத்து உயர் நிலைப்பள்ளித் தலைமையாசிரியர் மாதிரி அந்த டீன் மாணவ மாணவிகளிடம் பழகுவார் என்பது ஊரறிந்த உண்மைதான். யாரும் அது பற்றி அதிகம் பொருட்படுத்துவது கூடக் கிடையாது. அகால நேரத்தில் இப்படிக் கூப்பிட்டனுப்பிக் காக்கப்போடுகிறாரே என்ற வருத்தம் உள்ளூர சுலட்சணாவுக்கு இருந்தாலும் பொறுமையாகக் காத்திருந்தாள்.

ஒரு பெரிய ஏப்பத்தோடும் கையில் சாப்பாட்டுக்குப் பின் உட்கொள்ள வேண்டிய ஒரு கொத்து வண்ண வண்ண மாத்திரைகளுடனும் டீன் அவள் அமர்ந்திருந்த வீட்டு முன்பக்க வாரந்தாவுக்கு வந்தார். எந்தப் பேச்சுக்கோ நேரடியாக வரத் தயங்கி வேறு எதை எதையோ ஆரம்பித்தார் அவர்.

“என்னம்மா, உன்னைப்பத்தி இந்தக் காம்பஸ்லே ஏதாவது ந்யூஸ் கேள்விப்படாத நாளே இராது போல் தோன்றுகிறதே?”

“சொல்லுங்க இப்ப என்ன புது ந்யூஸ் கேள்விப் பட்டிங்க?"”

“ஒண்ணு ரெண்டா சொல்லி முடிக்கிறதுக்கு? அடுத்தடுத்துக் கேள்விப்பட்டுக்கிட்டேயிருக்கேன்.”

“என்னன்னு சொல்ல மாட்டேங்கறீங்களே?"”

“அக்ரிகல்ச்சுரல் ஸ்டூடண்ட்ஸைக் கூப்பிட்டு செல்மீட்டிங் மாதிரி அடிக்கடி ஏதோ ஆர்கனைஸ் பண்றியாமே?'.”

“அப்புறம்...? மேலே.”

“ஏதோ காம்பஸ் முழுக்க வேலை நிறுத்தத்துக்குக் கூட ஏற்பாடு பண்றியாமே?”