பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

226

சுலட்சணா காதலிக்கிறாள்



யிருந்த ஒர் இரகசியக் கடிதம் கனகராஜின் தந்தையை எச்சரித்திருந்தது. ஓரளவு பயமுறுத்தவும் செய்திருந்தது.

எக்காரணம் கொண்டும் அவனைக் கவனிக்காமல் தனியே விட்டு விடாதீர்கள்! சுலட்சணா விஷயத்தில் அவன் கடுமையாக ஏமாந்து போயிருக்கிறான் என்னிடம் அவன் வாயாலேயே தற்கொலை அது இது' என்று இரண்டு மூன்று முறை விரக்தியாக உளறியிருக்கிறான். இங்கிருந்து புறப்படுகிற சமயத்தில் டீனிடம் அவன் பேசியதிலிருந்தும், என்னிடம் நடந்து கொண்டதிலிருந்தும் மிக மிகச் சோர்ந்து தளர்ந்த நிலையிலிருந்தான் அவன். இங்கிருந்தோ, வேறு எங்கிருந்தோ சேலம் முகவரிக்குக் கனகராஜ் பெயருக்கு எந்தத் தபால் வந்தாலும் நேரே அவனிடம் கொடுத்து விட வேண்டாம். நீங்கள் பார்த்து சென்ஸார் செய்து அவசியமானால் மட்டும் கொடுக்கவும். ஏர்க்காடு, பெங்களுர், என்று கனகராஜை எங்கும் தனியாக அனுப்ப வேண்டாம்- மிக மிக ஜாக்கிரதை யாயிருக்கவும்! தனிமை அவனைத் தற்கொலைக்குத் தூண்டக் கூடும்.'

பல்கலைக் கழகத்திலிருந்து கனகராஜ் சேலத்திற்கு வந்து சேர்ந்த இரண்டு நாளைக்குள் அவன் தந்தை பெயருக்கு ஸ்டிரிக்ட்லி பிரைவைட் அண்ட் கான்ஃபிடென்ஷியல்என்ற குறிப்புடன் சுகவனத்திடம் இருந்து இந்தக் கடிதம் வந்து சேர்ந்திருந்தது. டீன் கூடத் தனியாக இதே எச்சரிக்கையைச் செய்து டெலிஃ போனில் கனகராஜின் தந்தையோடு பேசியிருந்தார். கடுமையாக எச்சரித்தும் இருந்தார்.

கன்கராஜின் தந்தை தர்மராஜ் தமது பணத்திற்கும் செல்வாக்கிற்கும் புகழுக்கும் இது ஒரு சவால் என்று நினைத்தார். அப்படி இவனைப் பைத்தியமாக அடித்த பெண் யார் தான்’ என்று பார்த்துவிட விரும்பினார் அவர். டீன் பிள்ளையுடனும் சுகவனத்துடனும் ஃபோனிலேயே தமது வியப்பைத் தெரிவித்தார்.