பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா.பா.

23



"ஆமாம் பெரிய அக்கறை. தன்னந்தனியாச் சிரமப் பட்டுத் தவிச்சுக் கெட்டிக்காரத்தனமாக் குடும்பம் நடத்தற பொம்பளையைப் பத்தித் தேடி வந்து கோள் சொல்லிட்டுப் போறத்துக்கு முடியும். ஆம்பிளைகளுக்கு இதைவிட வேற வேலையே இல்லியோ?” .

'உங்க அம்மிணி அம்மா பெரிய பதிவிரதையா என்ன? இப்பிடிப்பட்ட பொம்பளையைப் பத்திக் கோள் சொல்லாமப் புகழாரமா சூட்டுவாங்க?’’

'அம்மிணி அம்மா பதிவிரதையோ இல்லையோ, உங்க சிநேகிதர் ஒண்னும் யோக்கியமானவரில்லை. வேலைமெனக் கெட்டு இங்கே தேடி வந்து கோள் சொல்றதே உங்க சிநேகிதருக்குப் பொழைப்பாப் போச்சு! இதைத் தவிர அவருக்கு வேற வேலை கீலை எதுவுமே கிடையாதா?’’

நண்பன் அடிக்கடி வருவதும் பக்கத்து வீட்டைப் பற்றிச் சொல்லி எச்சரிப்பதும் தன் மனைவிக்கு அறவே பிடிக்க வில்லை என்பது கண்ணனுக்குப் புரிந்தது. என்ன இருந்தாலும், எப்படிப்பட்டவளாக இருந்தாலும் ஒரு பெண் இன்னொரு பெண்ணுக்காகக் கொஞ்சம்கூட விட்டுக் கொடுக்காமல் பேசியதைக் கண்டு ஆச்சரியமடைந்தான் அவன்.

அம்மிணி அம்மாவைப் பற்றிய வெறுப்புப் பிரசாரம் சொந்த வீட்டிலேயே எடுபடாமல் போய் முறியடிக்கப் பட்டதில் அவனுக்கு மிகவும் வருத்தம்தான்.

பக்கத்து வீட்டுப் பாகவதரிடம் நண்பனை அழைத்துச் சென்று அறிமுகப் படுத்தினான் .நண்பன் அந்தப் பத்திரிகைப் படத்தையும் அவரிடம் காண்பித்துக் குறை சொன்னபோது பாகவதர் காதைப் பொத்திக் கொண்டார்.

"சிவசிவா! உங்களுக்குச் சம்ஸ்கிருதம் தெரியாட்டாலும் குறள் படிச்சிருப்பேள்னு நினேக்கிறேன். புறம் கூறிப்