பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

82

முள்வேலிகள்

5

சில நாட்களுக்குப் பின் நண்பன் ஒரு பகல் வேளையில் கண்ணனின் அலுவலகத்துக்கே தேடி வந்து அவனிடம் ‘உண்மை விளம்பி’ என்ற பத்திரிகை ஒன்றைத் திணித்து விட்டுப் போய்ச் சேர்ந்தான்.

“ஆபீஸில் பிரித்துப் படிக்காதே! வீட்டுக்குப்போனதும் பிரித்துப் பார்...முடிந்தால் பக்கத்து வீட்டுப் பாகவதருக்கும் தெரியச் செய்...” என்று போகிற போக்கில் பரபரப்பாகவும் பதற்றமாகவும் சொல்லிவிட்டுப் போனன் அவன்.

தனது அலுவலகச் சந்தடியிலும் வேலைப் பரபரப்பிலும் கண்ணனுக்கு அதைப் பார்க்கவோ, படிக்கவோ நேரமும் இல்லை. மனநிலையும் இல்லை. அப்படியே வாங்கிப் பைக்குள் போட்டதுதான். அலுவலகம் முடிகிறவரை மறுபடி அதன் நினைவே வரவில்லை.

மாலையில் அலுவலக நேரம் முடிந்து வீடு திரும்புவதற்குத் தெருவில் இறங்கினால் ஒவ்வொரு நியூஸ் பேப்பர் ஸ்டாலிலும் ‘உண்மை விளம்பி’ தொங்கியது. ‘உண்மை விளம்பி’யின் போஸ்டரை எழுத்தெண்ணிப் பார்த்துக் கொண்டிருந்தால் அவனை யாராவது தப்பாக நினைக்கக்கூடும் என்ற கூச்சம் இருந்தும் அதில் தென்பட்ட தலைப்புப் பார்க்க வைத்தது. நின்று நிதானித்துப் படிக்கவும் வைத்தது.

‘இஞ்சிக் குடியாரின் மஞ்சள் வேலைகள். அம்மிணி அம்மாளிடம் பாகவதர் அம்மன் பூஜை’—என்ற தலைப்பைப் பார்த்ததும் நண்பன் தேடிக்கொண்டு வந்து கொடுத்து விட்டுப் போன பத்திரிகை பைக்குள் இருப்பது நினைவுக்கு வந்தது.