பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பா.

33

கண்ணனுக்கு அதைப் படித்ததும் என்னவோ போலிருந்தது. இதபாஷப்ரவீண இஞ்சிக்குடி நாகசாமி பாகவதரை அவ்வளவு நீளமான பெயர் முழுவதையும் சொல்லித்தான் தெரியவேண்டும் என்பதில்லை. சங்கீத உலகில் எப்படி ஊர்ப் பெயரை ஆரம்பித்தவுடனே ஆள் பெயர் தெரியுமோ அப்படியே இஞ்சிக்குடி என்று தொடங்கின உடனேயே அடையாளம் புரிந்துவிடக் கூடிய பெயர் பாகவதருடையது. ஏதோ நாலு இடத்திலே கதா காலட்சேபம் செய்து பிழைக்கிறவரை நண்பன் இப்படி எல்லாம் தாறுமாறாக எழுதி வயிற்றிலடிக்கலாமா என்று அவன் மனம் உள்ளுற வருந்தியது. பாகவதர் அம்மிணி அம்மாள் குடும்பத்தோடு நெருக்கமாகப் பழகியது கண்ணனுக்கும் பிடிக்கவில்லை என்றாலும் இப்படி எல்லாம் ‘உண்மை விளம்பி’ போன்ற ஏடாகூடமான பத்திரிகையில் அவரைப் பற்றித் தாறுமாறாக வருவதும் அவனுக்குப் பிடிக்கவில்லை. பாகவதருடைய மேதா விலாசம் பெரியது என்பது ஊரறிந்த விஷயம்.

இப்போது இது தானாக நடந்திருக்க முடியாது. பாகவதர் கடுமையான வார்த்தைகளில் பேசியதையடுத்து நண்பன் தன்னிடம் சவால் விடுவது போல் கோபமாகக் கூறிவிட்டுப் போனது.கண்ணனுக்கு நினைவு வந்தது. இதை நண்பன் செய்திருப்பானானால் அவன் இந்த அளவுக்கு மோசமாக இறங்கியிருக்க வேண்டியதில்லை என்றே கண்ணன் நினைத்தான். இந்த அளவு பாகவதரைக் கொச்சைப் படுத்தி விட்டிருக்கக் கூடாது என்பதே கண்ணனின் எண்ணமாயிருந்தது. நண்பன் மேல் சிறிது ஆத்திரம்கூட அப்போது அவனுக்கு ஏற்பட்டது.

பக்கத்து வீட்டுக்காரனாகிய தன்னை அம்மிணி அம்மாளே அறிவதற்கு முன்பே அறிந்திருந்தும் தன்னோடும் தன் வீட்டோடும் நெருங்கிப் பழகாமல் பாகவதர் திடீரென்று அங்கே குடி வந்தவுடன் அம்மிணி அம்மாள் வீட்டோடு