பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பா.

35

 மாகப் பழக முயலவில்லை. ஆனாலும் கண்ணனுக்கு அது மட்டுமே போதவில்லை.

'இவர்தான் பக்கத்து வீட்டுக்குக் குடிவரப் போகிறார் என்று தெரிந்ததும், முன்பு இவர் குடியிருந்த இராமநாதன் தெரு ஒண்டிக் குடித்தனத்திற்கு இவரைத் தேடிப் போய்க் காலனி நலன் நாடுவோர் சங்கத்தில் இவரைச் சேர்த்து வந்தேன். இருந்தும் இவர் என்னை விட்டுவிட்டு இங்கே வந்ததும் இந்த 'ரெக்கார்ட் டான்ஸ் அம்மாக்களி'டம் போய் ஒட்டிக்கொண்டுவிட்டார்! பணமும் அழகும் இருந்தால் மற்ற எது இல்லாவிட்டாலும் காந்தத்தில் போய் ஒட்டிக் கொள்கிற இரும்பு மாதிரி மனிதர்கள் போய் மொய்க்கிறார்களே!' என்று கண்ணன் தனக்குள்ளே நினைத்தான். இந்த நினைப்பெல்லாம் சேர்ந்து குமைந்து கொண்டிருந்தபோது தான் நண்பன் வந்து எரிகிற நெருப்பில் எண்ணெய் வார்த்த மாதிரி அதைக் கிளறி ஊதி மேலும் கனலச் செய்துவிட்டான். .

இன்று இப்போது இந்த ரெளடித்தனமான மஞ்சள் பத்திரிகையைத் தேடி வந்து தன்னிடம் திணித்துப் பாகவதருக்கும் தகவல் தெரிவிக்கச் சொல்கிறான் நண்பன்! இதில் இவனுக்கு ஏன் இத்தனை குரூரமான சந்தோஷம்? பாகவதரிடம் பேசுவதையே ஏறக்குறைய நிறுத்திவிட்ட நான் போய் இதை எப்படி அவரிடம் எடுத்துக் கூட்டி ஆரம்பித்துச் சொல்வது? நல்ல விஷயமாயிருந்தாலாவது பரவாயில்லை. இதைப் போய் அவரிடம் காண்பித்துப் பேசத் தொடங்கினாலே நான் அவரைப் 'பிளாக் மெயில்' செய்கிறேனோ என்பது போன்ற சந்தேகமும் கோபமும் என்மேல் அவருக்கு வராதா? நண்பன் ஏன் இத்தனை இங்கிதக் குறைவாக நடந்துகொள்கிறான்? நம் சொந்த அக்கம்பக்கத்து விவகாரத்தை இவனைப் போல ஒர் அரைவேக்காட்டு நண்பனிடம் நான் தெரிவித்திருக்கவே கூடாதோ? நான் செய்ததுதான் தவறோ?