பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

முள்வேலிகள்

கொஞ்ச நாளைக்கு நீங்கள் இங்கே வரவே வேண்டாம்".-- என்று அவர்களே கூறினாலும் அதற்குத் தயாராயிருக்கும் துணிவோடுதான் அவர் சென்றிருந்தார். பிழைப்பைக் காப்பாற்றிக் கொள்கிற ஆளாயிருந்தால் அம்மிணி அம்மாளுக்கும் மற்றவர்களுக்கும் தமிழ் படிக்கத் தெரியாது என்ற ஒரே வசதியைப் பயன்படுத்திக்கொண்டு அந்த விவரமே அவர்களுக்குத் தெரியவிடாமல் மறைக்கவே அவர் முயன்றிருப்பார். ஆனால் பாகவதர் அப்படிச் செய்யவில்லை. ஆண் துணையற்ற அம்மிணியம்மாவின் குடும்ப நண்பர் என்ற தம் உரிமையை இம்மியும் தவறாகப் பயன்படுத்துகிற எண்ணம் அவருக்கு இல்லை. உலகத்துக்கு அவர் பயப்படவில்லை. அதே சமயம் உண்மையை மறைக்கவும் விரும்பவில்லை. தாம் செய்யாத தவற்றுக்காக வருந்தவோ கூசவோ அவர் தயாராயில்லை.

தேவி பாகவதம், பூஜை எல்லாம் முடிந்தது. ஆரத்தி எடுத்து சம்பிரதாயமாகப் பூஜையை நிறைவு செய்தபின் தம்முடைய வழக்கமான கதா காலட்சேப பாணியிலேயே அதை விவரிக்க ஆரம்பித்தார் அவர்:

‘’இன்றைக்கு ஶ்ரீ ராமகிருஷ்ண பரம ஹம்சரின் உபகதைகளிலே மிகவும் அருமையான கதை ஒன்றை இப்போது உங்களுக்குச் சொல்லப் போகிறேன். கதையைவிட அதன் உள்ளர்த்தம்தான் மிக முக்கியம். எல்லாரும் உள்ளர்த்தத்தை மட்டும் கவனியுங்கள்.

‘’இரண்டு சிநேகிதர்கள் வீட்டை விட்டு வெளியே புறப்பட்டார்கள். மாலை நேரம். ஒரு சிநேகிதன் கோவில் முன் மண்டபத்தில் நடக்கும் இராமாயணப் பிரவசனத்தைக் கேட்பதற்காகப் போய்க் கொண்டிருக்கிறேன். என்றான். மற்றொருவன் இன்பமாகப் பொழுதைக் கழித்து மகிழ்வதற்காகத் தாசி வீட்டுக்குப் புறப்பட்டுப் போகின்றேன் என்றான்.