பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பா.

41

‘’போகிற வழிக்குப் புண்ணியம் தேடி இராமாயணம் பாகவதம், என்று கேட்டுப் பயன் அடையாமல் இப்படிக் காமுகனுக அலைகிறாயே? நீ தேறுவாயா? உன்னை நினைத்து நான் பரிதாபப்படுகிறேன்' -என்று இரண்டாவது சிநேகிதனைப் பார்த்து முதல் சிநேகிதன் வருத்தப்பட்டான். அதைக் கேட்டு இரண்டாவது சிநேகிதனும் சும்மா இருந்துவிட வில்லை. தான் பங்கு உபதேசத்தை முதல் சிநேகிதனுக்கு உடனே பதிலுக்குச் செய்யத் தொடங்கினான்:

‘’என்றைக்கோ எந்த உலகத்திலோ புண்ணியப் பயன் தரப்போகிறதென்று இன்றைக்கு இந்த உலகத்தில் என் சிரமப்பட வேண்டும்? கிடைக்கிற இன்பங்களைக் கிடைக்கு மட்டும் அநுபவிக்க வேண்டியதுதானே? அடுத்த உலகத்தையும் அடுத்த பிறவியையும் நினைத்துக்கொண்டு வீணாக அவஸ்தைப்படுவானேன்?‘’

‘’ஒருவர் மற்றவரை மாற்ற முயன்றாலும் அது பலிக்காமல் புறப்படும்போது திட்டமிட்டபடியே இருவரும் அவரவர் நினைத்த இடங்களுக்குப் போயிருந்தனர். அவரவர் நினைத்ததை அநுபவித்தனர்.

‘’ஆனால் ஒரே ஒரு வித்தியாசம். இன்று இவர்கள் இருவரும் தத்தம் பாதைகளை நோக்கி விடை பெற்றுப் பிரியும்போது ஒருவர் மற்றவரைக் கேட்ட வினாவும் அதன் பாதிப்பும் அவரவர் மனத்தை ஊடுருவித் தைத்த நிலையில் பிரிந்திருந்தனர்.

‘’தாசி வீட்டுக்குப் போன நண்பன் சிந்தித்தான்.

‘’ஒருவேளை நம் நண்பன் சுட்டிக் காட்டிக் குறை கூறியது போல் நாம் செய்வது தவறுதானா? இராமாயணம், பாரதம், பாகவதம் போன்ற சத்விஷயங்களைப் பற்றி எல்லாம். கேட்பதற்குப் பதில் தாசி வீட்டில் வீணே பொழுதைக் கழிக்கிறோமே? ஐயோ! வழிதவறிப் போனோமே?'