பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

முள்வேலிகள்

"எனக்கும் உங்களுக்கும் பால்யப் பிராயமா இருந்தா இதிலே சொல்லியிருக்கறதை ருசுப்பிச்சிருக்கணும்னு கூட எனக்குத் தோணும் சுவாமி" என்று அம்மிணி அம்மாள் கண்களைச் சிமிட்டிக் கொண்டே கூறியபோது திடீரென்று அவளது வயது குறைந்து பேரழகு யுவதியாகி விட்டாற் போலப் பாகவதரின் கண்களுக்குக் காட்சியளித்தாள்.

அதைக் கேட்டுப் பாகவதர் கூச்சப்பட்டார். அம்மிணி அம்மாவைப் பார்த்து முகத்தில் அசடு வழியச் சிரித்தார். அவர் இத்தனை வெளிப்படையான நெஞ்சுறுதியை அந்தப் பெண்களிடம் முதலிலேயே எதிர்பார்க்காததுதான் காரணம்.

7

காலணி வெல்ஃபேர் அஸோஸியேஷன் கூட்டம் நடந்தது. ஒரு முக்கியமான நோக்கத்தோடு அந்தக் கூட்டம் கூட்டப்பட்டிருந்ததால் எல்லா அங்கத்தினர்களும் வருவதற்கு வசதியாக ஜெனரல் பாடியாகவே கூட்டப்பட்டிருந்தது. காலனிவாசிகள் எல்லாரும் வந்தனர்.

கொஞ்சம்கூடக் கூச்ச நாச்சமின்றி-ஊர் என்ன பேசும் என்ற பயமோ பதற்றமோ இல்லாமல்-அம்மிணி அம்மாவும், நாகசாமி பாகவதரும் சேர்ந்தே வந்தார்கள். பாகவதர் அழகிய சால்வை போர்த்திக்கொண்டு சிவப் பழமாகக் காட்சியளித்தார். கையகலப் பொன் சரிகைக் கரையிட்ட நேரியல் முண்டு கட்டி நெற்றியில் அழகிய சந்தனக் கீற்றைத் தீற்றிப் பொட்டுக்கும் நெற்றிக்கும் வித்தியாசம் தெரியாத சந்தன நிற மேனி மினுமினுக்கப் புன்சிரிப்போடு ஒவ்வொருவராகக் கைகூப்பி வணங்கியபடி அம்மிணி அம்மா மீட்டிங் நடக்கும் ஹாலில் நுழைந்தபோது காரியதரிசி கண்ணன் மட்டும் அவள் வந்த திசையிலேயே பாராமல் முகத்தை வெறுப்போடு வேறுபக்கமாகத் திருப்பிக் கொண்டான்.