பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

முள்வேலிகள்

கருதிய தமிழும் வந்துவிடுகிறது! இருவருமே இதை ஆட்சேபிக்க மாட்டார்கள் என நினைக்கிறேன்."

"நாளடைவில் சொல்லிச்சொல்லி மக்கள் அதை 'ஐயோ அப்பா நகர்' என்பது போல ஆக்கி விடுவார்கள். ஆகவே 'ஐயப்பன் நகர்' என்று இருந்தால் எமக்கு மறுப்பு இல்லை" - என்றார் புலவர்.

"எனக்கும் அது சம்மதம்தான்"--என்றார் பாகவதர். கூட்டம் முடிந்ததும் கண்ணன் புலவரைத் தனியே அழைத்துச் சென்று அவருக்குத் தன் அந்தரங்கமான பாராட்டுக்களைத் தெரிவித்தான்.

"புலவரே! உங்களை மாதிரிச் சிலர் இருப்பதால்தான் நம் காலனியின் தன்மானமும் இனமானமும் பாதுகாக்கப்படுகிறது. என் பாராட்டுக்கள். என் ஒத்துழைப்பு எப்போதும் உங்களுக்கு உண்டு" --என்று கண்ணன் கூறியவுடன் புலவர் உச்சி குளிர்ந்தார்.

எப்படியோ பாகவதர் கூறிய 'சாஸ்தா நகர்' என்ற பெயரை மாற்றி விட்டோம் என்ற திருப்தியில் கண்ணன் புலவரைப் பாராட்டினாலும் மற்றவர்கள் எல்லாரும் பாகவதர் கொடுத்த பெயரின் மறு வடிவமே 'ஐயப்பன் நகர்' எனக் கூறி அவருக்கு நன்றி தெரிவித்தனர். பெயர் சூட்டிய பெருமை பாகவதரின் பெருமையாகவும் வெற்றியாகவுமே அவர்களால் கொண்டாடப்பட்டது. காலனியின பெயர் சாமி பெயராக இருக்க வேண்டுமென்று பாகவதரும் மற்றவர்களும் விரும்பினார்கள். அது பலித்துவிட்டது. சாஸ்தாவானால் என்ன? ஐயப்பனானால் என்ன? நினைத்தபடி பெயர் கிடைத்துவிட்டது. உண்மையில் 'சாஸ்தா நகர்' என்று பெயர் வைக்கும் யோசனையைப் பாகவதருக்குக் கூறியதே அம்மிணி அம்மாதான். நல்ல வேளையாக அது கண்ணனுக்குத் தெரியாது. பாவம்! தெரிந்தால் கூட்டத்தில் அதுவும் கடுமையான விமர்சனத்துக்குட்பட்டிருக்கும்.