பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பா.

55

அப்படியே ஸ்டிரெயிட்டா உங்க மொட்டை மாடிக்கு ஓவர் ஹெட் கனெக்க்ஷன் வர்ற மாதரி ஒரு புதுப் போஸ்ட் நடச் சொல்லி ஏற்பாடு பண்ணிக்குங்க...உங்களுக்காக நான் தொடர்ந்து நஷ்டப்பட முடியாது."

"மிஸ்டர் கண்ணன்! கொஞ்சம் அடக்கமாகவே பேசுங்கோ. இதுக்கு ஏன் இப்பிடி ஊரெல்லாம் கூடற மாதிரிக் கூப்பாடு போடறீங்க? இந்த வீடுகளுக்கு இப்படி உங்க வீட்டுக்குள்ளே கூடி ஊடுருவி வர்ற மாதிரிக் கனெக்ஷன் தரச் சொல்லி நான் கேட்டு வாங்கிக்கலே...வீடுகள் உங்களுக்கும் எனக்கும் அலாட் ஆகிறதுக்கு முன்னாடி எல்லா வீடுகளுமே ஹவுஸிங் வாரியத்துக்குச் சொந்தமா இருந்தப்ப அவங்களே எலெக்ட்ரிசிடி போாடுக்கு எழுதி இப்பிடி எல்லாம் தாறுமாறாக் கனெக்க்ஷன வாங்கித் தொலைச்சிருக்காங்க.

"அதுக்காக என் தோட்டம், மரங்கள் செடிகொடிகள்லாம் இப்பிடி நாசமாகணுமா?"

"யார் சொன்னா அப்பிடி? அவங்க இப்பிடி அடிக்கடி வந்து என் வீட்டு ஓவர்ஹெட் லைனுக்காக உங்க வீட்டு மரங்களை வெட்டறது எனக்கும்தான பிடிக்கலை."

"பிடிக்கலைன்னு சும்மா வாயால் சொல்லிட்டா மட்டும் ஆச்சா? அதைத் தவிர்க்க உருப்படியா நீங்களோ அந்தப் பக்கத்து வீட்டு அம்மாளோ எதுவுமே பண்ணினதாத் தெரியலேயே?"

"எங்க எல்லோருக்கும் நீங்கதான் பிரதிநிதி! அதாவது காலனி வெல்ஃபேர் அஸோஸியேஷனின் காரியதரிசி, காலணி முழுவதும் உடனே அண்டர்கிரவுண்ட் கேபிள் சிஸ்டத்தை இண்ட்ரொடியூஸ் பண்ணச் சொல்லி அஸோஸியேஷன் சார்பில் எம். இ. எஸ். டிவிஷனல் இன்ஜீனியருக்கு நீங்களே ரெப்ரஸெண்ட் பண்ணுங்களேன்! அதை விட்டு விட்டு...."