பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பா.

57

இப்போது கண்ணனுக்கு அவமானப்பட்டு விட்டது போன்ற உணர்வு துடிதுடித்தது. ஏதாவது தீவிரமாகச் செய்தாக வேண்டுமென்று எண்ணினான். அவன் உள்ளே வந்ததும், "ஒண்ணுமில்லாத விஷயத்தை எல்லாம் ஏன் பெரிது படுத்தி அக்கம்பக்கத்தாரை வம்புக்கு இழுக்கிறீர்கள்? எலெக்ட்ரிசிடிக்காரன் வந்து லயன்லே இடிக்கிறதுன்னு மரம் செடி கொடிகளை வெட்டினா அதுக்கு இவங்க என்ன பண்ணுவாங்க? இவங்களை ஏன் திட்டறீங்க?" என்றாள் சுகன்யா.

"உன் மரமண்டைக்கு இதெல்லாம். புரியாது! அவங்க ரெண்டு பேருடைய வீட்டுக்கும் போற ஓவர்ஹெட் லைனாலே தான் நம்ம தோட்டம் பாழாகுது."

"அதை அமைதியா அவங்ககிட்டே எடுத்துச் சொன்னக் கேட்டுப்பாங்களே! இத்தனை சத்தம் போட்டு எம். இ .எஸ். காரன் முன்னாடி அங்கேயே தெருவிலே வச்சா அவங்களை வம்புக்கு இழுக்கணும்?"

சுகன்யாவின் வார்த்தைகளை அவன் பொருட்படுத்தவே இல்லை. 'உம்மால் முடிஞ்சதை நீர் செஞ்சுக்கலாம்' -என்று பாகவதர் கடைசியாகச் சவால் விட்டு விட்டு உள்ளே போனதுதான் நினைவுக்கு வந்தது. அந்த வேளை பார்த்துச் சகுனியைப் போல் அந்த நண்பனும் வந்து சேர்ந்தான். கண்ணனின் போதாத வேளையோ அல்லது நண்பனின் அதிர்ஷ்டமோ அவனிடம் போய் மின்சார லைன் தகராறு முதல் பாகவதர் சிபாரிசின் பேரில் அம்மிணி அம்மா காலனியில் கோயில் கட்ட நன்கொடை கொடுத்தது.வரை எல்லாம் சொல்லித் தொலைத்தான். நண்பன் பதிலுக்குக் கண்ணனைக் கேட்டான்:

"உண்மை விளம்பியிலே பச்சை பச்சையாப் புட்டுப்புட்டு வச்சப்புறமும் அவங்க இன்னும் மிரளலையா? ஊர் சிரிச்சுதேப்பா?"